இன்றைய காலகட்டத்தில் நாம் சாப்பிட விரும்பும் உணவுகளை வெளியில் எங்கும் தேடிச் சென்று சாப்பிட வேண்டிய தேவையில்லை. வீடோ, அலுவலகமோ அல்லது பணியாற்றும் மற்ற இடங்களில் இருந்தோ ஃபோனில் ஆர்டர் செய்தால் போதும். அந்த உணவு உங்களை தேடி வரும். மேலும், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சில நேரங்களில் மறக்க முடியாத அனுபவங்கள் கூட நிகழும். அந்த வகையில், தற்போது வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு உணவு டெலிவரி செய்த ஊழியர் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த நிதின் குமார் என்ற வாடிக்கையாளர், ஸ்விக்கி செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது, அங்கு உணவு கொண்டு வந்த டெலிவரி பாய் பத்மநாபனுடன் நிகழ்ந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் நிதின்குமார் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "இதை இன்றிரவு என்னுடைய ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் எனக்குக் கொடுத்தார்.

பத்மநாபன் 19+ வருட அனுபவமுள்ள ஒரு முழு அளவிலான டெவலப்பர். அவர் ஒரு காலத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை நடத்தினார். அவருக்கு வேலை வேண்டுமா..? என்று நான் கேட்டேன். அதற்கு அவர், இல்லை, என் தொழிலை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வர முயற்சிக்கிறேன் என்று தெரிவித்ததாக" நிதின் குமார் பதிவிட்டுள்ளார். மேலும், பத்மநாபனுக்கு தகுதியான வாய்ப்பை நாம் பெற்றுத் தருவோம். இதை அனைவருக்கும் பகிருங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பத்மநாபன் ஒரு தொழில்முனைவோர். அவர் உணவுப் பொருட்களை வழங்குவது வெறும் வாழ்வாதாரத்திற்காக மட்டுமல்ல. கடந்த காலத்தில் தானே நடத்திய ஒரு வியாபாரத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகவும் தான். இந்தப் பதிவில் நிதின் குமார் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பக்க ரெஸ்யூம் (பணியின் விவரம்), தலைப்பாக "Delivered with care, built with code" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது டெலிவரி பார்ட்னர் பத்மநாபனின் ரெஸ்யூம். அவர் ஒரு 19+ வருட அனுபவமுள்ள முழுமையான ஸ்டாக் டெவலப்பராக (Full-stack developer) உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதின் குமார் பகிர்ந்த பத்மநாபனின் லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, "கடந்த 2018ஆம் ஆண்டு பத்மநாபன் தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அவர் ஒரு எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் பட்டம் பெற்ற தொழில்நுட்ப நிபுணர் ஆவார். அதேபோல், நேரடி உதவியை வழங்கும் திறன், தெளிவான தொடர்பு முறைகள், சிறு வியாபாரங்களுக்கான ஏற்கத்தக்க விலை நிர்ணயம், வேகமான முடிப்புடன் தொழில்முறை தரம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அந்த ரெஸ்யூமில், "எனது சிறப்பு விருப்பம் ரொபோட்டிக்ஸ் மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) துறையில் உள்ளது. இதைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை நான் செய்து வருகிறேன். அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், அவர்களை இதில் வளர உதவவும், புதிய யோசனைகள் மற்றும் புதுமைகளை உருவாக்கவும் ஆர்வமாக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது பொழுதுபோக்காக மாணவர்களுக்கும் தொழில்துறைக்கும் இடையில் பாலம் அமைக்க, கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் செமினார்கள் வழங்குவது" என அந்த ரெஷ்யூமில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications