சென்னை: இந்தியாவில் தற்போது பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக flipkart நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் போனை வெறும் 11 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி ஆவலுடன் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையில் மக்கள் வெறும் 11 ரூபாய்க்கு ஐபோன் 13 ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம் என பெரிய அளவில் விளம்பரம் செய்தது பிளிப்கார்ட். பாஸ்டர் பிங்கர்ஸ் ஃபர்ஸ்ட் (fastest fingers first) என்ற பெயரில் இரவு 11 மணிக்கு விற்பனை தொடங்கும் போது ஐபோன் 13 வெறும் 11 ரூபாய்க்கு வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என பிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்தது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் 11 மணிக்கு தள்ளுபடி விலையில் ஐபோன் 13 வாங்க வேண்டும் என காத்திருந்தனர். ஆனால் விற்பனை தொடங்கிய உடனேயே அது "அவுட் ஆப் ஸ்டாக்" என காட்டியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

விற்பனை தொடங்கிய உடனேயே ஸ்டாக் இல்லை , விற்பனையாகிவிட்டது என தங்களுக்கு திரையில் காட்டியதாக பல பயனாளர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். சிலர் ஐபோன் 13 ஸ்மார்ட் போனை 11 ரூபாய்க்கு தாங்கள் ஆர்டர் செய்ததாகவும் பின்னர் பிளிப்கார்ட் நிறுவனமே அதனை ரத்து செய்து விட்டது என்றும் கூறுகின்றனர். இன்னும் சிலரோ ஆர்டர் செய்யும் போது பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை எதிர் கொண்டதாக கூறுகின்றனர்.
இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மோசடி செய்வதாக பலரும் புகார் கூறி வருகின்றனர் . இது தொடர்பாக நிச்சயமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஒரு பயனர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒரு மார்க்கெட்டிங் வித்தை, இது மிகப் பெரிய மோசடி, பயனர்களுக்கு இழைக்கும் அநீதி என பலரும் flipkart நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு பயனர் இதற்காக நான் இரவு 7 மணியிலிருந்து காத்திருந்தேன் ஆனால் ப்ளிப்கார்ட் நிறுவனம் ஏமாற்றி விட்டது எனக் கூறியுள்ளார்.
இதனிடையே வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு பதிலளித்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம் இந்த சலுகை பற்றி பல்வேறு வாடிக்கையாளர்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்களை நாங்கள் படித்தோம். fastest fingers first இந்த சலுகையின் படி முதல் மூன்று வாடிக்கையாளர்கள் மட்டுமே 11 ரூபாய்க்கு ஐ போன் 13 வாங்கியுள்ளனர் என விளக்கம் தந்துள்ளது. வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை , பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையின் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி மற்றும் இரவு 11 மணிக்கு பெரிய அளவிலான டீல்களை அறிவிக்கிறோம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள் என கூறியுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications