தொடர்ச்சியாக மோசடி சம்பவங்கள் ஏற்பட்டு லட்சக்கணக்கில் மக்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக வெவ்வேறு செய்திகளில் பார்த்தோம். இதனால் மொத்தமாக 2024-ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் சுமார் 11,333 கோடியை மக்கள் இழந்துள்ளதாக சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இதில் பங்கு வர்த்தக மோசடிகளில் ஏற்பட்ட நிதியிழப்புகள் தான் முதலிடத்தில் உள்ளன இதைத்தொடர்ந்து முதலீட்டு மோசடிகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் இந்த இரண்டு மோசடிகள் குறித்தும் பெறப்பட்டுள்ளன. இந்த மோசடிகளின் மூலம் ரூ. 3,216 கோடி மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முதலீட்டு மோசடிகள், பங்கு வர்த்தக மோசடிகளின் மூலம் கொள்ளையடித்த கும்பல் தற்போது டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்று கூறி மோசடி செய்து வருகின்றனர். இதனால் சுமார் 63,480 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மோசடிகளில் சிக்கி ரூ.1616 கோடி மக்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிட்டிசன் பைனான்சியல் சைபர் பிராடு ரிப்போட்டிங் மற்றும் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தின் தரவுகள் இந்த ஆண்டு மட்டும் 12 லட்சம் மோசடி புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை.. அதாவது சுமார் 45 சதவீத மோசடி சம்பவங்கள் கம்போடியா, மியான்மர் மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
2021-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 30.5 லட்சம் புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ரூ.27,914 கோடியை இழந்துள்ளனர். இந்த 30 லட்சம் புகார்களில் 11,31,221 புகார்கள் 2023-ஆம் ஆண்டிலும், 5,14,741 புகார்கள் 2022-ஆம் ஆண்டிலும், 1,35,242 புகார்கள் 2021-ஆம் ஆண்டிலும் பெறப்பட்டுள்ளன.
கடந்த அக்டோபர் மாதம் "மான் கி பாத்" என்ற வானொலி நிகழ்ச்சியில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் அதிகரித்திருப்பதை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார். எந்த ஒரு அரசு நிறுவனங்களும் மக்களை தொலைபேசியில் மிரட்டி பணம் கேட்பதில்லை என்று கூறினார். டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் குறித்து கூறுகையில், "இதன் கீழ் அழைப்பவர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள், ட்ராய் அதிகாரிகள் என கூறிக்கொண்டு நம்பிக்கையுடன் பேச்சை தொடங்குகின்றன. மக்கள் இதைப்பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் திருடி விடுவார்கள். 3 மணி நேரம் தனியறையில் வைத்து டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி பணம் பறித்து விடுவார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.


Click it and Unblock the Notifications