தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், இந்தியாவின் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பரிசாக மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வழக்கமாக ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியை உயர்த்துகிறது. முதல் உயர்வு, ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், ஆனால் இது மார்ச் மாதத்தில் தான் அறிவிக்கப்படும். இரண்டாவது உயர்வு, ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும், இது தசரா அல்லது தீபாவளிக்கு முன்னதாக அறிவிக்கப்படும். அந்த வகையில் தீபாவளிக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் மத்திய அமைச்சரவை இன்று கூடியது.

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுகளை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருப்பதாக கூறினார். இதன் மூலம் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் பலனடைவார்கள் என கூறினார்.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 60% தொகை அகவிலைப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் அகவிலைப்படி என்பது 63 சதவீதமாக உயரும். இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை சம்பளமான 18,000 ரூபாய் வாங்கும் அரசு ஊழியருக்கு, தற்போதைய டிஏ மாதத்திற்கு 10,800 ரூபாய், இது 63%ஆக உயர்ந்து இனி 11,340 ரூபாய் கிடைக்கும். மாதாந்திர அகவிலைப்படியில் கூடுதலாக 540 ரூபாய் கிடைக்கும். அடிப்படை சம்பளத்தை பொறுத்து அகவிலைப்படி மாறும்.
இந்த அகவிலைப்படி உயர்வானது ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும். எனவே ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கான அரியர் தொகை வரும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். அதேபோல, ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய அகவிலை நிவாரணம் கிடைக்கும்.
வழக்கமாக தொழிலாளர் பணியகத்தின் மூலம் வெளியிடப்படும் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரியை அடிப்படையாக கொண்டே அகவிலைப்படி சதவீதம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தான் 3% அகவிலைப்படி உயர்வு கிடைத்துள்ளது.
ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இது தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகை செலவுகளை சமாளிக்க அகவிலைப்படியும் அரியர் தொகையும் உதவும்.


Click it and Unblock the Notifications

