இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமான காட்ரிஜ் சென்னை அருகே செங்கல்பட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 515 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு FMCG நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வருவதாகத் தெரிகிறது.
தென்னிந்தியாவில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க 135 கோடி ரூபாய் முதலீடு செய்ய டாபர் இந்தியா-வின் இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகப் புதன்கிழமை அறிவித்துள்ளது. இந்தத் தொழிற்சாலை எந்த மாநிலத்தில் வரும் என்பது வெளிப்படையாக அறிவிக்கவில்லை, ஆனால் தமிழ்நாட்டுக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்தப் புதிய உற்பத்தி தொழிற்சாலை டாபர் நிறுவனத்தின் ஆயுர்வேத ஹெல்த்கேர், பர்சனல் கேர் மற்றும் ஹோம் கேர் தயாரிப்புகளான டாபர் ஹனி, டாபர் ரெட் பேஸ்ட் மற்றும் ஓடோனில் ஏர் ஃப்ரெஷனர்களை உற்பத்தி செய்யும். இந்தப் புதிய வசதிக்கான சாத்தியமான இடங்களை நிறுவனம் ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது.
டாபர் இந்தியா தென்னிந்தியாவில் கிரீன்ஃபீல்ட் தொழிற்சாலையை அமைக்க மேற்கொண்ட முதல் முதலீடு இது என்பதால் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதுக்குறித்து டாபர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா கூறுகையில் தென்னிந்தியாவில் எங்கள் வணிகம் அதிகரித்துள்ளது, டாபரின் மொத்த உள்நாட்டு வர்த்தகத்தில் சுமார் 18-20 சதவீதத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமே வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் எங்களின் வர்த்தகம் அதிகரித்து வருவதால், இப்பகுதி தேவையை மேம்படுத்தப்பட்ட முறையில் பூர்த்திச் செய்யும் வகையில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை நிறுவ முடிவு செய்துள்ளோம் என்று மோஹித் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
டாபர் இந்தியா தற்போது 13 தொழிற்சாலைகளை வைத்து உற்பத்தி, பேகேஜ், விநியோகம், வர்த்தகம் செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications