தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதையும் தொழில் துறை உற்பத்தி பெருகி வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்பதிலும் தமிழ்நாடு அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டாபர் நிறுவனம் 400 கோடி அளவில் மிகப்பெரிய ஒரு தொழிற்சாலை அமைக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாளைய தினம் இந்த தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் பிரபல FMCG நிறுவனமான டாபர் 1.36 லட்சம் சதுர அடி பரப்பில் தன்னுடைய உணவுப்பொருட்கள் உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு அரசுக்கும் டாபர் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

இதன் மூலம் முதன்முறையாக டாபர் நிறுவனம் தென்னிந்தியாவில் தன்னுடைய உணவு உற்பத்தி ஆலையை அமைக்க இருக்கிறது. தென்னிந்தியாவிலேயே அமையக்கூடிய மிகப்பெரிய உணவு உற்பத்தி ஆலையாக திண்டிவனம் ஆலை இருக்கும் என டாபர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. 400 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலை மூலம் 700க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.

ஏற்கனவே டாபர் நிறுவனம் இந்த தொழிற்சாலை கட்டுமான பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பத்தை ஏற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி விட்டது. நாளைய தினம் இந்த ஆலையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இதனை அடுத்து கட்டுமான பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் விரைவில் இந்த ஆலை முழுமையாக செயல்பட தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாடு பொருளாதாரத்தை உயர்த்தி விட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தான் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்து வருகிறது.
டாபர் நிறுவனம் வீட்டு பராமரிப்பு பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக தன்னுடைய மிகப்பெரிய உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அதுவும் திண்டிவனத்தில் அமைக்கிறது. டாபர் பேஸ்ட், தேன் ,ஓடோமாஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இங்கே உற்பத்தி செய்யப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications