அரியலூர்: இந்தியாவின் பிரபல சிமெண்ட் உற்பத்தியாளரான டால்மியா பாரத் நிறுவனம் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தங்களது புதிய ஆலையில் உற்பத்தியை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் இதனை தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 10 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட இந்த புதிய பிரிவில் வணிக ரீதியான உற்பத்தி துவங்கும் போது நிறுவனத்தின் மொத்த சிமெண்ட் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 456 லட்சம் டன்களாக இருக்கும் என டால்மியா பாரத் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்தியாவின் தென் பிராந்தியத்தில் தங்களுடைய சந்தை இருப்பை வலுப்படுத்தவும் வளர்ந்து வரும் சிமெண்ட் தேவையை பூர்த்தி செய்யவும் நோக்கமாகக் கொண்டு டால்மியா பாரத் நிறுவனம் அரியலூர் மாவட்டத்தில் 204 கோடி ரூபாய் முதலீட்டில் ஆலையை விரிவாக்கம் செய்துள்ளது.
வரும் 2031 ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி திறனை 11 முதல் 13 கோடி டன்கள் வரை உயர்த்தும் நோக்கத்திற்கு இது உதவும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது டால்மியா நிறுவனம் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் டால்மியாபுரம் மற்றும் அரியலூர் மாவட்டம் தாமரை குளம் ஆகிய இரண்டு இடங்களில் சிமெண்ட் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஒரு அரவை பிரிவும் இந்த நிறுவனத்திற்கு உள்ளது.
இந்தியாவில் உள்கட்டமைப்பு பணிகள் அதிகரித்திருப்பது மற்றும் வீட்டு வசதித்துறை ஆகியவை வளர்ந்து வருவதால் சிமெண்டிற்கான தேவை அதிகரிக்கும் என இந்த நிறுவனம் கூறியுள்ளது.
1939ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெயதயால் டால்மியாவால் தொடங்கப்பட்டது தான் டால்மியா பாரத். மும்பை பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு ரூ.1,817ஆக உள்ளது.இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 34,032 கோடி ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டில் இந்நிறுவனம் ரூ.13,678 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் லாபம் ரூ.1,083 கோடி ஆகும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications