டெல்லி: மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத்துக்கு கூடுதலாக வருவாய்த்துறை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மார்ச் 1ஆம் தேதி அன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை மற்றும் வருவாய் துறை, நிதி துறை செயலாளர் பதவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த செயலாளர்கள் எடுக்கும் எந்த ஒரு கொள்கை மாற்றமும் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துபவை. எனவே இந்த பதவிகளுக்கு அரசு பொருத்தமான நபர்களை மட்டுமே நியமனம் செய்யும்.

அண்மையில் வருவாய் துறை செயலாளராக பணியாற்றி வந்த துகின் காந்த பாண்டே இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து வருவாய் துறை செயலாளர் பதவி காலியாக இருக்கிறது. இந்த நிலையில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜய் சேத் இனி கூடுதலாக வருவாய் துறை செயலாளர் பொறுப்பையும் கவனித்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜய் சேத்தினை பொறுத்தவரை ஏற்கனவே வருவாய் துறை செயலாளராக சில காலம் பதவி வகித்துள்ளார். 2024 டிசம்பர் மாதம் வருவாய் துறை செயலாளராக இருந்த சஞ்சய் மல்கோத்ரா இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அந்த பதவி காலியானது அப்போதும் அஜய் சேத்திற்கு வருவாய் துறை செயலாளர் பதவி இடைக்காலமாக வழங்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு கர்நாடக ஐஏஎஸ் கேடரான அஜய் சேத் பொது நிதி மேலாண்மை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் 33 ஆண்டுகால பணி அனுபவம் கொண்டவராக இருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகள், இரு நாடுகளுக்கு இடையிலான நிதி ஒத்துழைப்பு , அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புகளில் திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்துவது , பட்ஜெட் போடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கிறார்.
இதற்கு முன்பு அவர் கர்நாடக மாநிலத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றினார். வணிக வரிகள் பிரிவில் ஆணையராக செயல்பட்டு வந்தார். இதற்கு முன்பு ஆசிய மேம்பாட்டு வங்கியின் ஆலோசகர்களுள் ஒருவராகவும் பணிபுரிந்து அனுபவம் கொண்டவர். 2013 ஆம் ஆண்டு பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமர் விருது வழங்கப்பட்டது. இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பிடெக் இளநிலை பட்டத்தையும், பின்னர் எம்பிஏவும் படித்து முடித்துள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications