சென்னை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம், ஆதார் கார்டில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அவற்றை சரி செய்ய கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இதற்கு முன் ஆதார் திருத்தங்களுக்கான கடைசி நாள் மார்ச் 14, 2024 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் ஜூன் 14, 2024 வரை என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு நீங்கள் ஆதார் கார்டு புதுப்பித்தல் UIDAI உங்களிடம் குறிப்பிட்ட கட்டணத்தை வசூல் செய்யும்.
ஆதார்- சாதாரண மனிதனின் அதிகாரம் என்பதை நாம் அனைவரும் நமது ஆதார் அட்டைகளில் பார்த்திருப்போம். தற்போது ஆதார் அட்டை இல்லாமல் எந்த ஒரு அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் நாம் பெற முடியாது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் அட்டை அத்தியாவசிய அட்டையாக மாறிவிட்டது.

மத்திய, மாநில அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் கூட எந்தவொரு அடிப்படை வசதிகளைப் பெறுவதற்கும் ஆதார் அட்டையை தான் அடையாள அட்டையாக கருத்தில் கொள்கின்றன. வங்கிகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள் மற்றும் பல்வேறு துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணமாக கருதப்படுவது ஆதார் அட்டை தான்.
இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் அட்டையில் உள்ள தங்கள் தகவல்களை மிகவும் சரியாக வைத்திருப்பது அவசியமாகும். ஆதார் அட்டையில் உள்ள சில தகவல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் சரிசெய்யும் வசதிகள் உள்ளன.குறிப்பிட்ட சில தகவல்களுக்கு திருத்தம் செய்ய சில வழிமுறைகள் உண்டு.
உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் பிற தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை கவனித்து, மாற்றம் ஏதேனும் இருப்பின் அதனை திருத்தம் செய்து கொள்ள வேண்டும்.
திருத்தங்கள் மேற்கொள்ள சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
பெயர்: ஆதார் அட்டையில் தனது பெயர் தவறாக இருப்பின் அதனை திருத்தம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதன்படி ஒருவர் தனது பெயரினை இரண்டு முறை மாற்றிக்கொள்ளலாம்.
முகவரி: ஆதார் அட்டையில் உள்ள மற்ற தகவல்கள் போல் அல்லாமல் ஒருவர் தனது முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும். ஏனெனில் மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வேறு சில இடங்களுக்கு மாற வாய்ப்பு இருப்பதால் பொதுமக்களுக்கு இந்த வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
பிறந்த தேதி: ஆதார் அட்டையில் தனது பிறந்த தேதியினை மாற்றுவதற்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒருவரின் பிறந்த தேதியினை திருத்தம் செய்ய சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
பாலினம்: ஒருவரின் ஆதார் அட்டையில் தனது பாலினம் தவறாக இருப்பின் அதனை ஒரேயொரு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
இவ்வாறு உங்கள் ஆதார் அட்டையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கான கடைசி நாள் மார்ச் 14, 2024 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் ஜூன் 14, 2024 வரை மாற்றப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குப் பிறகு நீங்கள் ஆதார் கார்டு புதுப்பித்தல் UIDAI உங்களிடம் குறிப்பிட்ட கட்டணத்தை வசூல் செய்யும்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications