மியான்மர்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மர் நாட்டில் வெள்ளிக்கிழமை அன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதும் 2000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மியான்மர் நாட்டில் வெள்ளிக்கிழமை அன்று 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் 1002 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2,376 பேர் காயமடைந்திருப்பதாகவும் 30 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக மியான்மர் நாட்டின் மண்டாலே நகரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. மியான்மர் நாட்டின் வடமேற்கில் இருக்கும் சகாயங்க் நகரை மையமாகக் கொண்டு 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் நாடு முழுவதும் உணரப்பட்டன. அதுமட்டுமின்றி அண்டை நாடான தாய்லாந்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் 6 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் தாய்லாந்து அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேரை தேடும் பணி நடைபெற்ற வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. மியான்மர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டாலேவில் நிலநடுக்கத்தை தொடர்ந்து நில அதிர்வுகள் அடுத்தடுத்து உணரப்பட்டன. இதில் ஒரு நில அதிர்வு 6.4 ரிக்டர் அளவு கொண்டதாக சக்தி வாய்ந்ததாக இருந்தது என தெரியவந்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து விழுந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இடுபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். இதுவரை 1002 பேரில்ன் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக மியான்மரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நீர் தேக்கங்கள் உடைந்து இருப்பதாகவும், இரண்டு இடங்களில் மேம்பாலங்கள் இருந்து இடிந்து விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருவதால் அந்நாட்டுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைப்பதிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் மியான்மர் நாட்டு அரசு தற்போது நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் ரத்தம் அதிகம் தேவைப்படுவதால் மக்கள் ரத்ததானம் வழங்க முன்வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவை முதல் கட்டமாக மியான்மர் நாட்டுக்கு 5 மில்லியன் டாலர்களை நிவாரணத் தொகையாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் மியான்மர் நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என கூறி இருக்கிறது. மியான்மர் நாட்டின் ஐந்து நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டிடங்கள் சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆங்காங்கே தற்காலிக மருத்துவ முகாம்கள் நிறுவப்பட்டு மீட்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications