சென்னை: இந்தியாவில் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய உணவு பொருள் ஆதாரமாக இருப்பவை ரேஷன் கடைகள். மத்திய, மாநில அரசுகள் சார்பாக ரேஷன் கடைகள் வாயிலாக மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ரேஷன் கார்டு வாயிலாக இப்படி மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்களை வாங்க வேண்டுமெனில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய KYC (Know your customer)ஐ அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.25 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடிக்கும் அதிகமானவர்கள் மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருந்தாலும் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்டிருப்பதாக புகார்கள் எழுகின்றன.
இறந்தவர்களின் பெயரை நீக்காமல் இருப்பது, திருமணமான பிறகு பெண்களின் பெயரை புகுந்த வீட்டிலும் சேர்த்துவிட்டு தாயார் வீட்டிலிருந்து பெயரை நீக்காமல் இருப்பது என பல்வேறு மோசடிகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் ரேஷன் கடையில் ஏழை மக்களுக்காக விற்கப்படும் பொருட்களை வாங்கி சிலர் கள்ளச் சந்தையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தடுக்கவும், மானிய விலையில் மற்றும் இலவசமாக வழங்கப்படக் கூடிய உணவுப் பொருட்கள் சரியான மக்களை சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு ரேஷன் கார்டில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக கேஒய்சி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ஆதார் எண் ,மொபைல் எண், வீட்டு முகவரி தொடர்பான ஆவணங்களை ஆன்லைன் வாயிலாகவோ அல்லது ரேஷன் கடைகளிலோ நேரடியாக சமர்ப்பித்து கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம்.
முதலில் இதற்கு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது தற்போது அது நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைவரும் தங்களுடைய ரேஷன் அட்டையில் கேஒய்சி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் கேஒய்சி செய்து கொள்ளவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தாகும் சூழல் உண்டாகலாம்.
எனவே பொதுமக்கள் தங்களுடைய ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று தங்களுடைய கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம். ரேஷன் கடைகளில் நம்முடைய கைரேகை பதிவு செய்தாலே போதும் நம்முடைய விவரங்கள் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.
ஆன்லைனை விட நேரடியாக ரேஷன் கடைக்கே சென்று கேஒய்சி அப்டேட் செய்வது எளிமையானது.டிசம்பர் 31ஆம் தேதி வரை காலக்கெடு இருக்கிறது என கடைசி நேரத்தில் சென்று அப்டேட் செய்வதை தவிர்த்து தற்போது இருக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


Click it and Unblock the Notifications