சீன ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஏஐ தளம் டீப்சீக் யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. டீப்சீக் அறிமுகத்தால் அமெரிக்க
டெக் துறை ஆட்டம் கண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னேற்றம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது.
இதேவேளையில் ஏஐ துறையில் எங்களை ஆடிச்சிக்க யாராலும் முடியாது, முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என சாம் ஆல்ட்மேன் இந்தியாவில் பேசிய வீடியோ டீப்சீக் வெற்றிக்குப் பின்பு கடந்த 2 நாட்களாக டிரெண்டாகி வருகிறது.

இந்த விவாதத்தின் மத்தியில், சமுக வலைத்தளத்தில் ஒலா நிறுவனத்தின் இணை நிறுவனரான பாவிஷ் அகர்வால் நிறுவிய Krutrim என்ற ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனம் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது.
Krutrim 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யுனிகார்ன் நிலையை அடைந்தது, 50 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திரட்டும் முயற்சியில் இந்நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அடைந்த முதல் இந்திய ஏஐ யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனம் என்ற தகுதியை அடைந்தது.
இந்த மாபெரும் சாதனைக்குப் பிறகும், Krutrim தளம் அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த ஏஐ தளத்தைப் பயன்படுத்திய மக்கள் இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்கள் துல்லியமாக இல்லை என்றும், அதன் நம்பகத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் குறித்து பல்வேறு விமர்சனத்தையும், குறைகளையும் முன்வைக்கின்றனர்.
இந்த விமர்சனங்கள் தான் தற்போது சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது, ஒரு எக்ஸ் பயனர் நகைச்சுவையாக ஒலாவின் மின்சார ஸ்கூட்டர்கள் எப்போது தீப்பிடிக்கும் என்பதை Krutrim துல்லியமாகக் கணிக்க முடியும் என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து பலர் பாவிஷ் அகர்வால்-ஐ நேரடியாக டேக் செய்து Krutrim குழுவினரிடம் ஏஐ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
பல விமர்சனங்களைப் பெற்று இருந்தாலும் பாவிஷ் அகர்வால் Krutrim தனது எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்துள்ளது, இந்நிறுவனம் ஏஐ சிப்ஸ், ஏஐ டிரைவன் மேம்ஸ் மற்றும் எல்எல்எம் ஆகியவற்றை உருவாக்கத் திட்டமிட்டு உள்ளார். ஏஐ துறையில் செயல்படுவது என்பது செலவு மிகுந்த ஒரு விஷயமாக இருக்கும் காரணத்தால், இத்திட்டத்திற்கான நிதியை பாவிஷ் அகர்வால் தனது குடும்ப அலுவலகத்திலிருந்து பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications