மத்தியில் 2014ம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசு மத்திய பட்ஜெட்டில் எந்ததெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டில் பெரும் பங்கு நிதியமைச்சகத்துக்கு செல்கிறது. 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின்படி, நிதியமைச்சகம் அதிகபட்சமாக 38.6 சதவீத பங்கினை கொண்டுள்ளது. 2014-15 மற்றும் 2019-20ம் நிதியாண்டுகளின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் முறையே 36.7 மற்றும் 37.3 சதவீத பங்கு நிதியமைச்சகத்துக்கு சென்றது.
பாதுகாப்புத்துறை: நிதியமைச்சகத்துக்கு அடுத்தபடியாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிகபட்ச ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீட்டில் 12.9 சதவீதம் இத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இருப்பினும் 2014-15ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவாகும். அதேசமயம் ஒதுக்கப்பட்ட ரூபாய் அடிப்படையில் பார்த்தால் பாதுகாப்பு துறைக்கான நிதி 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கு பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. 2014-15ம் நிதியாண்டில் ரூ.2.8 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது.

உள்கட்டமைப்பு : பட்ஜெட் ஒதுக்கீட்டில் மற்ற துறைகளை காட்டிலும் உள்கட்டமைப்பு அமைச்சகங்கள் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளன. நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில், 2015ல் ஒன்பதாவது இடத்தில் இருந்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை 2025ம் நிதியாண்டில் 3வது இடத்தை பிடித்தன. இத்துறைக்கான பட்ஜெட் பங்கு 2 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்தது. அதேசமயம் இதே காலகட்டத்தில் ஒதுக்கீடு ரூ.0.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ரயில்வே அமைச்சகம்: 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டில் 5.3 சதவீத பங்கு ரயில்வேக்கு சென்றது. 2015ல் 11வது இடத்தில் இருந்த ரயில்வே 2025ல் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் இத்துறைக்கான ஒதுக்கீடு 748 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025ம் நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.2.5 லட்சம் கோடி கிடைத்தது. 2015ல் ரயில்வேக்கு ரூ.0.3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்: 2025ம் நிதியாண்டில் பட்ஜெட் ஒதுக்கீடு அடிப்படையில் பார்த்தால், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் 5வது இடத்துக்கு சரிந்துள்ளது. 2015ல் 3வது இடத்தில் இருந்தது. 2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் மொத்த ஒதுக்கீட்டில் 4.64 சதவீதம் மட்டுமே இத்துறைக்கு ஒதுக்கப்பட்டது. இது 2015ல் 7.11 சதவீதமாக இருந்தது. இருப்பினும், ஒதுக்கீடுகள் ரூ.1.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம்: இந்த அமைச்ககம் 5வது இடத்திலிருந்து 6வது இடத்துக்கு சரிந்துள்ளது. 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் இத்துறையின் பங்கு 4.2 சதவீதத்திலிருந்து 3.7 சதவீதமாக குறைந்துள்ளது.இருப்பினும் ஒதுக்கீடு தொகை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2015ல் இத்துறைக்கு ரூ.0.6 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டுக்கு இத்துறைக்கு ரூ.1.8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
வேளாண் அமைச்சக்கம்: 2015ல் மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.0.2 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் 2025ல் இத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.1.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது 450 சதவீதம் வளர்ச்சியாகும். பட்ஜெட் பங்கு அடிப்படையில் இத்துறை 7வது இடத்தை பிடித்துள்ளது.
உர அமைச்சகம்: 8வது இடத்தில் ரசாயனம் மற்றும் உர அமைச்சகம் உள்ளது. 2015ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் 4 சதவீத பங்கினை இத்துறை கொண்டு இருந்தது. இது 2025ல் 3 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் இத்துறைக்கான ஒதுக்கீடு ரூ.0.7 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.6 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
தொலைத்தொடர்பு அமைச்சகம்: 2025ம் நிதியாண்டின் பட்ஜெட் ஒதுக்கீட்டில் 2.8 சதவீத பங்களிப்புடன் தொலைத்தொடர்பு 9வது இடத்தை பிடித்துள்ளது. 2015ல் 15 இடத்தில் இருந்தது. இந்த காலத்தில் தொலைத்தொடர்பு துறைக்கான ஒதுக்கீடுகள் ரூ.0.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மோடி அரசு 2025ம் ஆண்டின் மொத்த பட்ஜெட்டில் 80 சதவீதத்துக்கு கூடுதலாக மேற்கண்ட துறைகளில் செலவிட்டுள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications