அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் தேதியன்று நடத்திய அதிரடி தாக்குதலில்ல வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். அவர் வெனிசுலா நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு உலக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலாவை நிலையான, நம்பிக்கையான ஆட்சியின் கையில் ஒப்படைக்கும் வரையில் அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றும், வெனிசுலா கச்சா எண்ணெய் வளங்களை பாதுக்காக்க ராணுவம் களத்தில் நிறுத்தப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில் வெனிசுலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்ததுள்ள சூழ்நிலையில் அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

வெனிசுலா உச்ச நீதிமன்ற உத்தரவு
நிகோலஸ் மதுரோ கைதான உடனே வெனிசுலாவின் உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டது. அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை இடைகால அதிபராக நியமித்தது.
இது அந்நாட்டின் அரசு நிர்வாகத்தை தொடர்ந்து கட்டுக்குள் கொண்டு வருவதை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. நிகோலஸ் மதுரோ இல்லாத நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை காப்பாற்ற இந்த உத்தரவு வந்துள்ளது.
யார் இந்த டெல்சி ரோட்ரிக்ஸ்?
டெல்சி ரோட்ரிக்ஸ் 2018 ஜூன் முதல் வெனிசுலாவின் துணை அதிபராக பணியாற்றி வருகிறார். அவர் நிதி மற்றும் எண்ணெய் அமைச்சராகவும் உள்ளார். துணை அதிபர் பொறுப்புகளை தாண்டி 2 முக்கிய துறையின் அமைச்சராகவும் இருக்கும் காரணத்தால் வெனிசுலா அரசில் மிக சக்திவாய்ந்த நபராக உள்ளார்.
நிகோலஸ் மதுரோ டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ "புலி" என்று வர்ணித்துள்ளார், அவரது விசுவாசம் மற்றும் கொள்கை பாதுகாப்புக்காக பலமுறை பாராட்டப்பட்டு உள்ளார்.
1969 மே 18 அன்று வெனிசுலா காரகாஸில் பிறந்த டெல்சி ரோட்ரிக்ஸ், ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ் என்ற இடதுசாரி கெரில்லா பிரிவு தலைவரின் மகள் ஆவார். 1970களில் லீகா சோசலிஸ்டா கட்சியை நிறுவியவர் அவரது தந்தை.
குற்றச்சாட்டுகள் விவரம்
அமெரிக்க அரசு நிகோலஸ் மதுரோ மீது விதித்துள்ள குற்றச்சாட்டுகளை பொதுமக்களுக்கு அமெரிக்க அரசு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அமெரிக்கா நிகோலஸ் மதுரோ மட்டும் அல்லாமல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று நபர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் பயங்கரவாத சதி, கொகைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருத்தல் மற்றும் சதி ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை விதித்துள்ளது.


Click it and Unblock the Notifications