டெல்லி: இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் மூலம் ஊக்குவித்து வருகின்றன. பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை அவர்கள் பணியாற்றுவதற்கு ஒரு தொழில்முறையான அலுவலக அமைப்பு இருக்காது.
முதலில் இவர்கள் இது போன்ற ஒரு அலுவலக அமைப்பை உருவாக்குவதற்கு பல லட்சங்களை செலவிட வேண்டி இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் குருகிராமை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு புதிய முறையை கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் பத்தில் ஒன்பது தொழில் முனைவோருக்கு அவர்கள் தொழிலுக்கு தேவையான நிதி, இணைந்து பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மற்றும் அலுவலக இடம் ஆகிய மூன்றும் கிடைப்பது தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதில் அலுவலக இடம் என்ற பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவது தான் AltF Coworking என்ற நிறுவனம். இந்த நிறுவனம் Year Zero என்ற ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த நல்ல ஐடியாவுடன் இருக்கக்கூடிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஓராண்டு காலத்திற்கு இவர்கள் இலவசமாக அலுவலகத்தை வழங்குகிறார்கள். 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஓராண்டுக்கு அனைத்து வசதிகளும் கூடிய இலவச அலுவலக இடம் வழங்கப்படும் என இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சர்தார் சாப்ரா தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரக்கூடிய இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவே இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கான தகுதிகளாக அவர்கள் நிர்ணயம் செய்திருப்பது,ஸ்டார்ட்அப் நிறுவனம் 25 வயதுக்கு உட்பட்ட நபர்களால் தொடங்கப்பட்டிருக்க வேண்டும், ஆறு அல்லது அதற்கும் குறைவான நபர்கள் மட்டுமே அந்த நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
சிறந்த திட்டமிடல் மற்றும் வளர்ச்சி நோக்கம் ஆகியவற்றை கொண்ட நிறுவனங்களுக்கே இதில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் வெற்றி பெற்று தேர்வாக கூடிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஓராண்டு காலத்திற்கு இலவச அலுவலக இடம் கிடைக்கும். அவர்களுக்கென வைஃபை வசதி , 24 மணி நேரமும் தேநீர் மற்றும் காபி உள்ளிட்ட வசதிகள் ஆகியவை கிடைக்கும் என சர்தார் சாப்ரா தெரிவித்துள்ளார்.
முதல் கட்டமாக இது டெல்லி மற்றும் டெல்லியை சுற்றி இருக்கக்கூடிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு என தொடங்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்காலத்தில் இது மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் . யோகேஷ் அரோரா மற்றும் சர்தார் சாப்ரா ஆகிய இரண்டு பேரால் தொடங்கப்பட்ட ஒரு கோ வொரிக்கிங் நிறுவனம் தான் AltF Coworking.
ஒரு சிறிய அறையில் தான் இவர்கள் இந்த கோவொர்க்கிங் நிறுவனத்தை தொடங்கினர். தற்போது இது 11 இடங்களில் 10,000 பேர் பணி செய்யக்கூடிய வசதிகளைக் கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இவர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு இருக்கைக்கு 5,000 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வாடகை பெற்றுக் கொண்டு அலுவலக இடங்களை வழங்குகின்றனர்.
இந்நிறுவனம் ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் என்ற அளவில் வருமானம் ஈட்டுகிறது. விரைவில் இவர்கள் ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் தங்களுடைய அலுவலகங்களை நிறுவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications