டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்ற உடன் இதற்கு முன்பு டெல்லி முதலமைச்சர்கள் தங்கி இருந்த வீட்டினை ஏற்க மறுத்துவிட்டார்.
டெல்லி பொதுப்பணி துறை சார்பாக முதலமைச்சருக்கு இரண்டு இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இல்லம் இவருடைய அதிகாரப்பூர்வ இல்லமாகவும் இரண்டாவது இல்லம் மக்களை சந்திக்கும் மையமாகவும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் இல்லத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன.

இந்த அதிகாரப்பூர்வ இல்லம் 60 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. பங்களா நம்பர் ஒன் என்ற பெயரில் ராஜ் நிவாஸ் மார்க் பகுதியில் இருக்கும் இந்த இல்லத்தை புனரமைக்க டெல்லி பொதுப்பணி துறை டென்டர் விடுத்துள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று வெளியான இந்த டெண்டரின் படி 60 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அதிகார பூர்வ இல்லத்தில் அனைத்து விதமான மின் கட்டமைப்புகளையும் மாற்றி அமைக்க வேண்டும் மொத்தமாக 60 லட்சம் ரூபாய் செலவில் இந்த புனரமைப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பங்களாவில் முழுவதும் மின்னணு சாதனங்கள் மாற்றப்பட உள்ளன. பங்களா முழுவதும் 5 ஸ்மார்ட் டிவி பொறுத்தப்பட வேண்டும் என டெண்டரில் கூறப்பட்டுள்ளது. அதே போல 24 இடங்களில் ஏசி பொருத்தப்பட வேண்டுமாம். இது தவிர மின்விசிறிகள் 39 இடங்களில் பொருத்தப்பட வேண்டும், ரிமோட் முறையில் இயங்கும் மின்விசிறிகள் பொருத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங் மெஷின் , டிஷ்வாஷர், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்டவை பொருத்த வேண்டும் எனவும் டெண்டரில் கூறப்பட்டிருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிடுகிறது. இதில் ஏசிக்கு மட்டும் 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட இருக்கிறதாம். அலங்கார விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 115 மின்விளக்குகள் அமைக்கப்பட இருக்கின்றன, 14 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வீடு நான்கு படுக்கை அறை கொண்டதாக இருக்கிறது. இது தவிர டிராயிங் அறை, விருந்தினர் அறை, வேலை செய்பவர்கள் தங்கும் அறை, சமையல் அறை உள்ளிட்டவை கொண்ட குடியிருப்பாக இருக்கிறது. தற்போது ரேகா குப்தா தனது சொந்த இல்லத்தில் வசிக்கிறார். இந்த வீடு புனரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் அவர் இங்கே குடியேறி விடுவார்.


Click it and Unblock the Notifications