டெல்லி நகரின் உயர்ந்த காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில், அதிகாரிகளால் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், டெல்லி மக்கள் பழைய வாகனங்களை விற்க கூட முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், விற்பனை விலையும் மிகவும் குறைவாக உள்ளது.
டெல்லி அரசின் இந்த புதிய விதியின் தாக்கத்தை நேரடியாக எதிர்கொண்ட வருண் விஜ் என்பவர் தனது குடும்பத்துக்கு சிறப்பு நினைவுகளை கொடுத்த, மிகவும் நேசித்த Mercedes-Benz ML350 காரை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த காரை அவர் 2015ஆம் ஆண்டு ரூ.84 லட்சத்திற்கு வாங்கியிருந்தார். ஆனால் தற்போது, புதிய விதி காரணமாக அதை வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு தான் விற்க முடிந்தது.

"இந்த கார் எங்கள் குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர்போல். அதை இழக்க வேண்டிய நிலை எனக்கு மனதளவில் மிகுந்த வேதனையளிக்கிறது" என்று வருண் விஜ் கூறியுள்ளார். இதே போல், பல டெல்லி வாகன உரிமையாளர்கள் தங்கள் பழைய வாகனங்களை மிகக் குறைந்த விலையில் விற்பதற்கு கடும் இழப்பை சந்திக்க வேண்டியதாயுள்ளது.
வருண் விஜ் விற்பனை செய்த Mercedes-Benz ML350 கார் மிகவும் நல்ல நிலைமையிலேயே இருந்தது. இதுவரை 1.35 லட்சம் கிலோமீட்டர்கள் மட்டுமே ஓடியிருந்தது. அத்துடன், அந்தக் காரின் பராமரிப்பு மற்றும் செயல்திறனும் மிகச் சிறப்பாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், டெல்லி அரசின் புதிய விதிமுறை காரணமாக, அவரிடம் வேறு எந்த முடிவும் இல்லாமல் அந்த காரை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதுகுறித்து வருண் விஜ் மேலும் கூறுகையில், "அந்தக் காரில் தான், வாரம் தோறும் 7 முதல் 8 மணி நேரம் பயணித்து, ஹாஸ்டலில் இருந்து தன் மகனை அழைத்து வருவோம். அந்த கார் குடும்பத்தில் ஒரு நெருங்கிய உறவுபோல இருந்தது. அந்த கார் 10 ஆண்டுகள் ஓடியிருந்தாலும், மிகச் சிறந்த நிலையில் பராமரிப்பு செய்யப்பட்டது. டயர்கள் மாற்றுவது மற்றும் வழக்கமான சர்வீஸ் செய்வது தவிர, எந்தவிதமான பெரிய பிரச்சனைகளும் இந்த காரில் வரவில்லை. இந்த கார் நல்ல பயண அனுபவத்தையும், நம்பகத்தன்மையையும் வழங்கியது" என்று தெரிவித்துள்ளார். மேலும், ரூ.2.5 லட்சம் என்ற குறைந்த விலையில் கூட அந்த காரை வாங்க யாரும் முன்வரவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அரசின் புதிய விதிமுறையை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த வருண் விஜ், இப்போது ரூ.62 லட்சம் மதிப்புள்ள மின்சார கார் ஒன்றை வாங்கியுள்ளார். இனி இதுபோன்ற விதிமுறைகளால் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தோடு தான் இந்த முடிவை எடுத்துள்ளார். தற்போது அவருடைய கனவு, அடுத்த 20 ஆண்டுகள் இந்த புதிய காரை ஓட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், இதற்கு இடையே அரசியல் அல்லது புதிய கொள்கை ஒன்று வந்துவிடக்கூடாதே என்ற அச்சம் அவருக்கு எழுந்துள்ளது. மேலும், 10 ஆண்டுகள் பழைய வாகனங்களை வைத்திருக்கும் பலரும் அவரை தொடர்பு கொண்டு, "இப்போது என்ன செய்யலாம்? விற்பதா? அல்லது வேறு வழி இருக்கிறதா?" என ஆலோசனை கேட்டு வருகின்றனர்.
டெல்லி அரசின் புதிய விதிமுறைகள் : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் ஜூலை மாதம் முதல் டெல்லியில் எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NGT) வழிகாட்டலின்படி டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, குறிப்பிடப்பட்ட காலத்தைக் கடந்த வாகனங்கள் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் அல்லது டீசல் பெற முடியாது.
டீசல் வாகனங்களுக்கு 10 ஆண்டுகள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுச்சூழல் நலன் மற்றும் பொது மக்களின் ஆரோக்கியம் கருதி, இந்த நடவடிக்கை அவசியமாக மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications