அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட டெக் நிறுவனமான டெல் மீண்டும் மாபெரும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே அமெரிக்க வேலைவாய்ப்பின்மை தரவுகள் அந்நாட்டுப் பங்குச்சந்தையைப் பதம் பார்த்து வரும் வேளையில் கடந்த வாரம் இன்டெல், இந்த வாரம் டெல் என அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த பணிநீக்கம் மூலம் டெல் அதிகப்படியான பணத்தைச் சேமிக்க வழிவகுத்தாலும், இந்த சேமிப்பை வைத்துப் பிற முக்கியமான திட்டத்தை டெல் செயல்படுத்த உள்ளது.
டெல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) ப்ராடெக்ட் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பணிநீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் தனது செய்தியில் குறிப்பிட்டு உள்ளது. உலகமே ஏஐ துறையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் இத்தகைய பணிநீக்கம் டெக் துறையைப் புரட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது.

டெல் நிறுவனம் இந்த புதிய பணிநீக்க சுற்றில் எத்தனை பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளது என்பது துல்லியமான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், பல ஊடகங்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றன. மேலும் ஒரு பணிநீக்க டிராக்கிங் தளம் ஒன்று, டெல் நிறுவனத்தின் இந்த பணிநீக்க சுற்றில் சுமார் 12,500 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறது.
இந்த பணிநீக்கத்தின் மூலம் டெல் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் அணிகள் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். இதில் பாதிக்கப்படும் ஊழியர்கள் டெல் நிர்வாகிகளான பில் ஸ்கானெல் மற்றும் ஜான் பைர்ன் ஆகியோரிடம் இருந்து அறிவிப்பைப் பெற உள்ளனர்.
டெல் நிறுவனத்தின் செயல்பாடுகளை streamline செய்வதற்கும் AI திறன்களில் முதலீடுகளை அதிகரிக்கும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கையாக இந்த பணிநீக்கம் விளங்குகிறது. சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனமாகவும், திறமைமிக்க ஊழியர் படையைக் கொண்டிருக்க நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாக பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மெமோ-வில் தெரிவித்தனர்.
டெல் நிறுவனத்தின் மறுசீரமைப்பு திட்டத்தில் முக்கியமான விஷயம் AI சேவைக்கும், ப்ராடெக்-களை உருவாக்குவதற்கும் புதிய பிரிவை உருவாக்கப்படுவது தான். டெல் நிறுவனம் AI சேவைகளுக்கு ஏற்ற சர்வர்கள் மற்றும் டேட்டா சென்டர் பிரிவில் உயர்தர சேவையை வழங்கும் நிறுவனமாக மேம்படுத்துவதே புதிய ஏஐ பிரிவு அமைப்பதற்கான நோக்கமாக உள்ளது.
2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து இந்த புதிய பணிநீக்க அறிவிப்பு நடந்துள்ளது. டெக் துறை நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது, 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,000 டெக் நிறுவனங்கள் 260,000 க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் பல பெரிய டெக் நிறுவனங்கள் பணிநீக்கங்களைக் கடந்த 3 மாதத்தில் தொடங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications