குடும்ப நிகழ்ச்சிகள், திருமணங்களில் கலந்துகொள்ளும் புதுமண தம்பதிகளிடம் கேட்கப்படும் பொதுவான கேள்வி, வீட்டில விசேஷமா..? என்பது தான்.
இந்த கேள்வியைக் கேட்பவர்கள் இனி கடுமையான பதிலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முன்பெல்லாம் இத்தகைய கேள்விக்குப் பதில் அளிப்பதில் மழுப்பி, தயங்கி வந்த இளம் தலைமுறையினர் தற்போது வெளிப்படையாகவும், பெருமையாகவும் கூறும் பதில்'DINK'.

இளம் தலைமுறையினர்
இந்திய இளம் தலைமுறையினருக்கு வேலை, வாழ்க்கை, நிதி சுதந்திரம், தனிநபர் மகிழ்ச்சி என தங்களுடைய வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதில் தீர்க்கமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இப்படி பல்வேறு காரணங்களுக்காகப் புதுமண தம்பதிகளும், இளம் தலைமுறையினரும் 'DINK' கலாச்சாரத்தை அதிகளவில் தேர்வு செய்யத் துவங்கியுள்ளனர்.
இந்த மாற்றம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எச்சரிக்கை மணியை அடிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது. DINK என்பது திருமணமான இரண்டு பேரும் வேலைக்குச் சென்று சம்பாதிப்பார்கள், ஆனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லாதவர்கள்.
இத்தகைய கலாச்சாரம் தற்போது பல பரிமாணங்களில் மாறியுள்ளது DINKY, DISK, DEWK, SINK, GINK, DINKWAD. இப்படிப் பல வகையில் மாறியுள்ள கலாச்சாரத்தில் மையமாக இருப்பது குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவு தான்.
இந்தியாவில் நடப்பு என்ன..?
இதன் எதிரொலியாக இந்தியாவில் 2.1 ஆக இருக்க வேண்டிய fertility rate 2023 தரவுகள் படி 1.9 ஆகக் குறைந்துள்ளது, இதேபோல் நாட்டின் 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.9 என்ற அளவுக்குக் குறைவாக உள்ளது, தமிழ்நாட்டில் மிகவும் மோசமாக 1.3 ஆக உள்ளது.
பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்
இது நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும் எனக் கூறப்பட்டாலும் கலவையான விமர்சனங்களே நிலவி வருகிறது. DINK கலாச்சாரம் மூலம் இந்திய மக்கள் அதிகம் சேமிப்பார்கள், அதிகம் செலவு செய்வார்கள், இதன் மூலம் அரசுக்குப் பெரிய அளவிலான வரி வருமானம் கிடைக்கக் கூடும்.
ஆனால் நீண்ட கால அடிப்படையில் இந்த வரி வருமான கணக்கு மாறும், இந்தியா சிக்கலில் மாட்டிக்கொள்ளும். அதாவது குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும் போது, வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகும், வயதான காலத்தில் உடன் இருந்து பார்த்துக்கொள்ள (நிதி செலவுகள் உட்பட) குழந்தைகள் இல்லாத காலகட்டத்தில் முதியோர் நலச் சேவைகள் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்.
இதனால் மத்திய - மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் வேகமாகக் குறையும், இது பொருளாதார ரீதியாக பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
சரி, ஏன் இளம் தலைமுறையினர் குழந்தைகள் வேண்டாம் என முடிவு செய்கிறார்கள்..?
இத்தகைய கலாச்சாரம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கும் வேளையில், UNFPA அமைப்பு இதுதொடர்பாக செய்யப்பட்ட ஆய்வில் இந்தியாவைத் தேர்வர்கள் 38 சதவீதம் பேர் நிதியியல் பற்றாக்குறையைக் காரணமாகத் தெரிவித்துள்ளனர், 22 பேர் குடும்ப அமைப்பில் நிலவும் சிக்கல்களை முக்கிய காரணமாகத் தெரிவித்துள்ளனர், 21 சதவீதம் பேர் வேலையில் உத்தரவாதம் இல்லாமல் இருப்பதைக் காரணமாகக் காட்டியுள்ளனர்.
குழந்தைகளில் ஸ்கூல் பீஸ், கோச்சிங் கட்டணம், மருத்துவ செலவு போன்றவை ஒரு 20 வருட நிதியியல் திட்டமாகவும், சுமையாகவும் இளம் தலைமுறையினர் நினைக்கிறார்கள்.
உடனே ஒரு கூட்டம் அந்த காலத்தில் 6 பிள்ளைகள், 10 பிள்ளைகளை பெற்றார்கள் என சிலர் கூறுவார்கள். அன்று ஏற்பட்ட செலவுகள், சேவைகள், வசதிகளும் தான் இன்றும் உள்ளதா என்பதை யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைத்து தலைமுறையினரும் உள்ளோம்.
அடுத்தாக பெரு நகரங்களில் வாழ்க்கையை நடத்த வேண்டுமாயின் இருவரும் வேலைக்குச் செல்வது கட்டாயமாகிறது. ஆனால் வீட்டில் நடக்கும் வேலைகள், பொறுப்புகள் பெரும்பாலும் பெண்கள் மீது தான் சுமத்தப்படுகிறது.
இந்த சுமையைக் குறைக்க வீட்டைச் சுத்தம் செய்ய, சமைக்க, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளத் தனி ஆட்களை வைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர். இதற்கான தனி நிதி சுமை ஏற்படுகிறது.
இதேபோல் நீண்ட தூர பயணம், எப்போதும் பணியில் ஆன்லைனில் இருக்க வேண்டிய கட்டாயம், வயதான பெற்றோர்கள், காலதாமதமாக நடக்கும் திருணம் என பல காரணிகளின் அடிப்படையில் DINK வாழ்க்கையைத் தேர்வு செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.
தென் கொரியாவில் நடந்தது என்ன..?
இதேவேளையில் பல மாநில அரசுகள் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மக்களுக்கு பல்வேறு நிதியுதவி அளிக்கத் துவங்கியுள்ளது.
ஆனால் தென் கொரியாவில் நிதியுதவியாக பெரும் தொகையைக் கொடுத்தும் fertility rate 2023ஆம் ஆண்டு 0.72 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து அந்நாடு ஜப்பான் போல அதிக வயதானவர்கள் மக்கள் தொகையைக் கொண்டு உள்ளது.
மத்திய மாநில அரசுகள் செய்ய வேண்டியவை
மத்திய மாநில அரசுகள் மக்களை அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துவதை விட மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதில் இருக்கும் தடைகளை உடைக்க வேண்டும், அதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
உதாரணமாக 50 -100க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தில் கட்டாயமாக creche அல்லது டேகேர் சென்டர் அமைக்கும் விதிமுறையைக் கொண்டு வரலாம், அல்லது தொழிற்துறை பூங்கா, ஜிசிசி அமைப்புகள் கூட்டணி அடிப்படையில் கட்டாய முறையில் டே கேர் சென்டர் வைப்பது போன்றவற்றைக் கொண்டு வரலாம், அதேபோல் குழந்தைகள் பிறந்து பின்பும், அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கும் பெண்களுக்கு மட்டுமே விடுப்பு அளிப்பதைத் தாண்டி தந்தைகளுக்கும் விடுப்பு கொண்டு வரலாம், இதை அரசு உத்தரவின் கீழ் அனைத்து நிறுவனத்திலும் கட்டாயமாக்கலாம்.
இதுமட்டும் அல்லாமல் குழந்தைகளின் பள்ளி, ஹாஸ்டல் செலவுகளைச் சமாளிக்க வருமான வரியில் சலுகை அளிக்கலாம், தற்போது பழைய வருமான வரி முறையின் கீழ் தான் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் புதிய வருமான வரி முறையில் இத்தகைய சலுகை இல்லை.
இதேபோல் குறைவான வீட்டு வாடகை, மகப்பேறு சேவைக்கு காப்பீடு, முதியோர்களைக் கவனிக்கும் சேவைகளை விரிவாக்கம் செய்வது போன்றவற்றை நடைமுறை செய்யும் போது இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications