இந்திய ரியல் எஸ்டேட் சந்தையில் ஆடம்பர சொத்துக்களுக்கான தேவை அதிகரித்து வரும் நேரத்தில், விளம்பர நிறுவனமான டென்சு சிஓஓ பாஸ்கர் ஜெய்ஸ்வால் சொந்தமாக வீடு வாங்க விரும்பாதவராகவும், தான் ஏன் சொந்த வீடு வாங்கவில்லை என்பதற்கான 3 முக்கிய காரணத்தை பட்டியலிட்டு உள்ளார்.
டென்சு சிஓஓ என்ற உயர் பதவியிலும், கை நிறைய சம்பளத்துடன் வீடு வாங்கக் கூடிய நிலையிலும், வாடகைக்கு வீட்டை விரும்புகிறார் பாஸ்கர் ஜெய்ஸ்வால். இவர் தற்போது மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மாதம் சுமார் ரூ.2.4 லட்சம் வாடகை கொடுத்து வசித்து வருகிறார். இது மட்டும் அல்லாமல் கடந்த 25 ஆண்டுகளில் ரூ.2 கோடிக்கு மேலான தொகையை வாடகைக்கு மட்டுமே செலவு செய்துள்ளார்.

யூடியூபர் அன்ஷுமன் ஷர்மாவுடனான 'Fix Your Finance' என்ற நிகழ்ச்சியின் பேசிய ஜெய்ஸ்வால் தனது சம்பளம் மற்றும் வாடகை வருமானத்தை சேர்த்து வருடத்திற்கு மொத்தம் 1.5 கோடி ரூபாயை வருமானமாக பெறுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையிலும் அவர் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவது என்பது மக்களை நீண்ட காலமாகப் பூட்டி வைப்பது என்றும், மக்களை பல்வேறு நகரங்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கான செல்வதை தடுக்கும் ஒரு முட்டுக்கட்டையாக பார்ப்பதாக தெரிவிக்கிறார். மேலும் தான் தங்குவதற்காக சொந்து வீடு வாங்காமல் இருப்பதற்கான 3 காரணத்தை பட்டியலிடுகிறார் பாஸ்கர் ஜெய்ஸ்வால்.
முதலாவது.. சொந்தமாக வீடு வாங்குவதற்குத் அதிகப்படியான முயற்சிகள் தேவை, நீங்கள் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது எளிதானது அல்ல. பாஸ்கர் ஜெய்ஸ்வால் டெல்லி, பெங்களூரு, மும்பை, மலேசியா, குவாங்சோ மற்றும் ஷாங்காய் ஆகிய இடங்களில் வசித்துள்ளார், அவர் பணிபுரிந்த ஒவ்வொரு இடத்திலும் வாடகை வீட்டில் தான் வசதித்து வந்துள்ளார்.

இரண்டாவது.. சொந்தமாக வீடு வாங்குவதில் ஆபத்து உள்ளது. ஏனெனில் நீங்கள் பெறும் வருமான விகிதத்தைப் பார்த்தால், அது மதிப்புக்குரியது அல்ல. உங்கள் பணத்தை டெபிட் பண்டுகளில் முதலீடு செய்தாலே சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும் என்று பொட்டில் அடித்தது போல் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது மற்றும் கடைசி காரணம்.. சொந்த வீடு வாங்குவது மூலம் நீண்ட காலமாக அதன் கடனுக்காகவும், ஓரே இடத்திலும் பூட்டிக்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
நீங்க என்ன சொல்றீங்க.. சொந்த வீடு வாங்குவது சரியா..? அல்லது எப்போது எந்த சூழ்நிலையில் சொந்த வீடு வாங்குவது சரியானதாக இருக்கும்..?


Click it and Unblock the Notifications