பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமரும் கர்நாடக மாநில எம்பியுமான தேவ கவுடா கோரிக்கை விடுத்தார்.
பெங்களூரு விமான நிலையம் இந்தியாவிலேயே பிஸியான விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான பயணிகளை கையாளும் விமான நிலையமாக பெங்களூருவில் இருக்கும் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இரண்டாவதாக விமான நிலையம் கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக மாநில எம்பி-யும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா மத்திய அரசு பெங்களூருவில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு அனுமதி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்பி தம்பிதுரை தமிழ்நாட்டில் ஓசூர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பான கேள்வியை முன் வைத்தார்.
அப்போது பேசிய தேவ கவுடா பெங்களூருவில் இரண்டாவதாக ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கர்நாடகா அரசு கோரி வருகிறது. இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் நாங்கள் ஆலோசனையும் நடத்தி இருக்கிறோம் என கூறினார். மேலும் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என்று நான் கூறவில்லை ஆனால் பெங்களூருவின் இந்த கோரிக்கைக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் செயல்பட்டு வரக்கூடிய கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது, இதனால் பயணிகளை கையாள முடியாமல் அந்த விமான நிலையம் தவித்து வருகிறது. இந்த சூழலில் பெங்களூரு நகருக்கு இரண்டாவதாக விமான நிலையம் அமைக்க வேண்டியது கட்டாயம் ஆக இருக்கிறது என்றார். இந்த பிரச்சனைக்கு தீர்வு கான்பதில் கர்நாடக அரசு தீவிரமாக இருக்கிறது என கூறினார்.
இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம மோகன் நாயுடு பெங்களூரு சர்வதேச விமான நிலையம் நாளுக்கு நாள் பிசியான விமான நிலையமாக மாறி வருகிறது ,இரண்டாவதாக ஒரு விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருகின்றன. இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் உறுதி செய்யப்பட்டு எங்களின் ஒப்புதலுக்கு வந்த உடனே நாங்கள் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்.
முன்னதாக கர்நாடக மாநில உள்கட்டமைப்பு துறை அமைச்சர் எம்.பி பாட்டில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு ஐந்து இடங்களை கண்டறிந்து இருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து இருந்தார். இதனிடையே பெங்களூருவுக்கு அருகில் இருக்கும் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும் நிலையில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் 150 கிலோமீட்டர் தொலைவிலேயே மற்றொரு சர்வதேச விமான நிலையம் அமைய விதிமுறைகள் இடம் தராது என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications