இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (DGCA) இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. விமான பயணிகளுக்கு மிகப் பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் ஏர்லைன் ரீஃபண்ட் விதிகளை மாற்றியுள்ளது. இந்திய விமான போக்குவரத்து துறையில் தொடர்ந்து விதிகளை மாற்றி வரும் காரணத்தில் விமான நிறுவனங்கள் பெரும் சோகத்தில் உள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின் படி பயணிகள் டிக்கெட் பதிவு செய்த 48 மணி நேரத்துக்குள் ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம், இதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.

நேரடியாக ஏர்லைன் இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் 24 மணி நேரத்துக்குள் சிறு பெயர் தவறுகளை (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) இலவசமாக திருத்தலாம்.
மேலும் இனி வரும் காலக்கட்டத்தில் விமான பயணிகல் ஏஜென்ட் மூலம் பதிவு செய்தாலும் ரீஃபண்ட் 14 வேலை நாட்களுக்குள் கிடைக்க வேண்டும், இதற்கு ஏர்லைனே பொறுப்பு என்ற புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது DGCA.
ஏன் இந்த மாற்றம்?
பயணிகளிடம் இருந்து நீண்டகாலமாக புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. ரீஃபண்ட் தாமதமாக கிடைப்பது, ஏர்லைன்கள் சரியாக பதிலளிக்காதது போன்ற பிரச்சினைகள் சமீப காலமாக அதிகரித்தன, இதன் அடிப்படையில் DGCA இப்புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் 2025இல் இண்டிகோ விமான சேவை பாதிப்புகளால் பல பயணிகள் சரியான நேரத்தில் பணத்தை திரும்பப் பெற முடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு மிகத் தெளிவான மற்றும் கடுமையான விதிகளை கொண்டு வர முடிவு செய்தது.

சாதாரண பயணிகளுக்கு என்ன நன்மை?
இந்த விதிகள் பயணிகளுக்கு மிகப் பெரிய நிவாரணம் அளிக்கும். தவறுதலாக தேதி அல்லது விமானத்தை பதிவு செய்தால் 48 மணி நேரத்துக்குள் ரத்து செய்து பணத்தை இழக்காமல் மீட்டுக்கொள்ளலாம். முன்பு சிறு ஸ்பெல்லிங் தவறுக்கு ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டது - இப்போது 24 மணி நேரத்துக்குள் இலவசமாக திருத்தலாம்.
விமான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் ரீஃபண்ட் தொகை 14 வேலை நாட்களுக்குள் கிடைக்க வேண்டும் - தாமதம் ஏற்பட்டால் ஏர்லைன் பொறுப்பு. ஏஜென்ட் மூலம் பதிவு செய்தாலும் ஏர்லைனே பணத்தை திருப்பி அளிக்க வேண்டும். இதனால் பயணிகளின் பணம் இப்போது பாதுகாப்பாக உள்ளது.
ஏர்லைன்களுக்கு என்ன பாதிப்பு?
ஏர்லைன்களுக்கு இது பெரிய பொறுப்பை ஏற்படுத்துகிறது. ரீஃபண்ட் தாமதமாக்க முடியாது, 14 நாட்களுக்குள் பணத்தை திருப்ப வேண்டும். இதனால் குறுகிய காலத்தில் பணப்புழக்க அழுத்தம் அதிகரிக்கலாம்.
முன்பு ரீஃபண்ட் பணத்தை நீண்ட நாட்கள் வைத்திருக்கும் வாய்ப்பு இருந்தது, இப்போது அது முடியாது. பதிவு மற்றும் ரீஃபண்ட் சிஸ்டங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
மொத்தத்தில், DGCA-யின் இந்த புதிய விதிகள் பயணிகளுக்கு லாபகரமாக இருந்தாலும், விமான நிறுவனங்களுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் விமான சேவையை எளிதாக்கும், நம்பக தன்மையை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications