தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழிலாக இருந்தாலும் சரி, நெருக்கடியான சூழ்நிலையை சந்திக்கும் போது அதனை தைரியமாக கையாண்டால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும். அதற்கு பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் திங்க்ரா சகோதரர்களை முன் உதாரணமாக நாம் சொல்லலாம்.
சோவியத் யூனியன் வீழ்ச்சியால் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கியது, விஜய் மல்லையாவிடம் பெயிண்ட் நிறுவனத்தை வாங்கியபோது ஏற்பட்ட கடுமையான பண நெருக்கடி போன்ற கடுமையான சூழல்களை கடந்து இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக பெர்ஜர் பெயிண்ட்ஸை அவர்கள் உயர்த்தியுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த சகோதரர்கள் குல்தீப் சிங திங்க்ரா மற்றும் குர்பச்சன் சிங் திங்க்ரா. இவர்கள் பூர்விகம் பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸ். இவர்களது குடும்பம் பரம்பரையாக பெயிண்ட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
1980களில் இந்தியாவில் ராஜ்தூத் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் வணிகம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சோவியத் யூனியனுக்கும் ஏற்றுமதி செய்ய தொடங்கினர். குர்பச்சன் தொழிற்சாலை நிர்வாகத்தை கவனித்து வந்தார். குல்தீப் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
சோவியத் யூனியன் வீழ்ச்சி கண்டபோது, இவர்களது ஏற்றுமதி வணிகம் முடிவுக்கு வந்தது. அதனால் உள்நாட்டு சந்தையை மட்டுமே அவர்கள் நம்பி இருந்தனர். இந்த சூழ்நிலையில் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் விலைக்கு வந்தது. 1991ல் யுனைடெட் ப்ரூவரீஸ் தலைவர் விஜய் மல்லையாவிடம் இருந்து பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தை திங்க்ரா சகோதரர்கள் வாங்கினார்கள்.
அந்த நிறுவனத்தை கையகப்படுத்தும்போது, அது சிறிய பெயிண்ட் நிறுவனமாக மற்றும் நிதி உறுதியற்ற தன்மை மற்றும் பல வருடங்களாக தொடர்ச்சியான நஷ்டத்தை சந்தித்து வந்த நிறுவனமாக இருந்தது. இருப்பினும் அவர்கள் நம்பிக்கையோடு அந்த நிறுவனத்தை வாங்கினார்கள்.
ஆனால் பெர்ஜர் பெயிண்ட்ஸை கையகப்படுத்தியபோது சகோதரர்களின் மன உறுதி குறைந்தது. தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லாத சூழலை சந்தித்தனர். ஒரு சமயம் அந்த நிறுவனத்துக்கு ரூ.10 கோடி தேவைப்பட்டது. அப்போது அது மிகப்பெரிய தொகை. இருப்பினும் அவர்கள் அதை குறுகிய காலத்தில் ரெடி செய்தனர்.
திங்க்ரா சகோதரர்களுக்கு அறிமுகமில்லாத நகரமான கொல்கத்தாவில் இந்த பெயிண்ட் வணிகம் வேரூன்றியிருந்தாலும், சிறந்த தொழில் நிபுணர்களை பணியமர்த்தி, அவர்களுக்கு தன்னாட்சி அளித்து, டீலர்களுக்கும், நிறுவனத்துக்கும் இடையே நேரடித் தொடர்பு வழிகளை வளர்த்தனர். அது முதல் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய பெயிண்ட் நிறுவனமாக உயர்ந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பெர்ஜர் பெயிண்ட்ஸ் பங்கு விலை ஆண்டுக்கு சராசரியாக 24 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது பெர்ஜர் பெயிண்ட்ஸ் பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.66,000 கோடியாக உள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் பெர்ஜர் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வருவாய் 8.2 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.9,547.8 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.8,826.4 கோடியாக இருந்தது.
பத்தாண்டுக்கு முன்பு போர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2013ல் திங்க்ரா சகோதரர்கள் ரூ.9,960 கோடி (120 கோடி டாலர்) சொத்து மதிப்புடன் 53வது இடத்தில் இருந்தனர். 2023ல் திங்க்ரா சகோதரர்களின் சொத்து மதிப்பு ரூ.68,060 கோடியாக (820 கோடி டாலர்) உயர்ந்துள்ளது.
இது டானி குடும்பத்தின் சொத்து மதிப்பான ரூ.66,400 கோடியை (800 கோடி டாலர்) காட்டிலும் அதிகமாகும். டானி குடும்பத்துக்கு சொந்தமானதுதான் ஏசியன் பெயிண்ட்ஸ்.


Click it and Unblock the Notifications