ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய திருபாய் அம்பானி பிறந்த தினம் இன்று, 1932 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். திருபாய் அம்பானி-யின் வெற்றி ஒவ்வொரு இந்திய மக்களின் வெற்றியாகப் பார்க்கப்படும் அளவுக்கு அவருடைய வளர்ச்சிப் பாதை அமைந்திருந்தது.
இவருடைய வளர்ச்சிப் பாதையில் மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுவது, ஒவ்வொரு ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தை லட்சக் கணக்கான முதலீட்டாளர்களை நேரில் அழைத்து ஒரு பொதுக் கூட்டம் மூலம் நடத்துவது தான், இதனாலேயே ரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக விளங்கியது.

திருபாய் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனத்தை வேகமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பொதுமக்களிடம் முதலீடுகளைத் திரட்ட முடிவு செய்தார். அந்தக் காலகட்டத்தில் பெரு வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்கள் மட்டுமே ஐபிஓ-வுக்குச் சென்றது, ஆனால் திருபாய் அம்பானி அதையும் உடைத்தார்.
திருபாய் அம்பானி 1977ல் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் ஐபிஓ மூலம் பொதுமக்களுக்குப் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டினார். இது மத்திய அரசு செபி அமைப்பை உருவாக்குவதற்கு 11 வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவில் வெளியான வெற்றிகரமான ஐபிஓ-க்களில் ஒன்று ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ்.
திருபாய் அம்பானி-யின் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தைச் சுமார் 2.82 கோடி ரூபாய் விலைக்கு மதிப்பீடு செய்து ஐபிஓ வெளியிடப்பட்டது. அந்தக் காலகட்டத்திலேயே நினைத்து பார்க்க முடியாத வகையில் சுமார் 7 மடங்கு அதிகப் பங்குகளுக்கு முதலீடு குவிந்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டாளர்கள் என்பதால், அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் நிறுவன வருடாந்திர கூட்டங்களைப் பெரிய திருவிழா போலப் பொது வெளியில் நடத்தினார். இதன் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது, இதுவே ரிலையன்ஸ் நிறுவனத்தை மக்கள் கொண்டாட முக்கியக் காரணம்.
1991 தாராளமயமாக்கல் செய்யப்பட்ட 5 ஆண்டுக் காலத்தில் திருபாய் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தில் சுமார் 4 ஐபிஓ-க்களை வெளியிட்டது. முதலீட்டாளர்களைக் கவரும் வண்ணம் வருமானத்தைக் காட்ட முடியாத காரணத்தால் 4 நிறுவனங்களும் ரிலையன்ஸ் உடன் சேர்க்கப்பட்டது.
1996க்கு பின்பு 2023ல் தான் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற நிறுவனம் பங்குச்சந்தைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications