குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் கடந்த 1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருபாய் அம்பானி பிறந்தார். அவரது முழுப்பெயர் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி, அவரது தந்தை ஒரு ஆசிரியர். தந்தை ஆசிரியர் என்பதால் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது, ஆனால் திருபாய் அம்பானிக்கோ படிப்பில் சுத்தமாக நாட்டமில்லை.
இதனாலேயே திருபாய் அம்பானி-க்கும் அவரது தந்தைக்குமான உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர் அதன்பிறகு வேலை செய்யத் தொடங்கினார். திருபாய் அம்பானி தனது 16வது வயதில் தனது உறவுக்கார சகோதரருடன் பணம் சம்பாதிப்பதற்காக ஏமன் நாட்டிற்குச் சென்றார்.

1949 ஆம் ஆண்டு ஏமன் நாட்டில் தனது முதல் வேலையாகப் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். அங்கு அவரது முதல் சம்பளம் 300 ரூபாய்க் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய பணியில் காட்டிய ஈடுப்பாட்டை கண்டு வியந்த பெட்ரோல் நிலையத்தின் மேலாளர் அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து ஃபைலிங் மேனேஜர் பதவிக்கு உயர்த்தினார்.
இருப்பினும் திருபாய் அம்பானி 1954ஆம் ஆண்டு யெமன் நாட்டை விட்டு, இந்தியா திரும்பினார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமான ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முதல் படியை எடுத்து வைக்கத் துவங்கினார் திரஜ்லால் ஹிராசந்த் அம்பானி.
குஜராத்தில் உள்ள கிராமத்தில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று முடிவு செய்த திருபாய் அம்பானி மும்பைக்குத் தனது குடும்பத்துடன் கையில் வெறும் 500 ரூபாய் எடுத்துக்கொண்டு கிளம்பினார். இந்த 500 ரூபாய் தான் இப்போது பல லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மும்பைக்குப் போனதும் பல வணிகங்களைக் கவனித்தார், குறிப்பாக ஏமன் நாட்டில் இருக்கும் போது பாலியெஸ்ட்ர் வர்த்தகத்தை கவனித்து வந்தார். இந்தியாவிலும் அதிகப் பாலியெஸ்ட்ர் தேவை இருப்பதைப் புரிந்து கொண்டார். இதுதான் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் உருவாக அடிப்படை காரணமாக இருந்தது.
திருபாய் அம்பானி தனது நண்பர் உடன் இணைந்து ரிலையன்ஸ் கமர்சியல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை நிறுவினார். வெறும் 330 சதுர அடியில் மும்பையில் முதல் அலுவலகத்தைத் தொடங்கினார். இதன் பின்பு ராக்கெட் வேகத்தில் பல மடங்கு வளர்ந்து பல தொழில்துறைகளில் நுழைந்து இன்று பெரும் சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது.


Click it and Unblock the Notifications