திருபாய் அம்பானியால் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் 1958 இல் ஒரு சிறிய நிறுவனமாகவும், ஒரு எளிய வர்த்தக நிறுவனமாகத் துவங்கப்பட்டது. திருபாய் அம்பானி முதன் முதலில் இந்த நிறுவனத்தைத் துவங்கியதே மசாலா பொருட்களை வெளிநாடுகளுக்கும், மொத்த விலையிலும் விற்பனை செய்யத் தான்.
ஆனால் ஆரம்பத்திலேயே பாலியஸ்டர் நூல்-ஐ வர்த்தகம் செய்யும் ஐடியா உடன் தான் திருபாய் அம்பானி தனது முதல் அலுவலகத்தை மும்பையில் 330 சதுரடியில் திறந்தார். சுக்கு, மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை விற்பனை செய்த நிறுவனம் இப்போது பெட்ரோல் தயாரிப்பில் இருந்து செயற்கைகோள் வாயிலாகப் பிராட்பேன்ட் சேவை அளிக்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

1965 இல் தனது கூட்டாளி உடனான கூட்டாணி முடிவுக்கு வந்தது திருபாய் அம்பானி இதே நிறுவனத்தின் கீழ் மசாலா பொருட்கள் வர்த்தகத்தை நிறுத்திவிட்டு, பாலியஸ்டர் வணிகத்தைத் தொடர்ந்தார். இதுதான் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான விஷயம். 1966 இல், ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆக மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டது.
அதே ஆண்டில் குஜராத்தில் உள்ள நரோடாவில் ஒரு சிந்தடிக் துணி ஆலையை நிறுவினார் திருபாய். 8 மே 1973 இல், இந்த நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனப் பெயர் மாறியது.
1975 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது வணிகத்தை ஜவுளித் தொழிலாக விரிவுபடுத்தியது, அதன் பின்னர் ரிலையன்ஸ் முக்கியப் பிராண்டாக "விமல்" அறிமுகம் செய்து, இந்தியாவில் பெரும் பகுதியில் பாலியஸ்டர் துணிகளுக்குப் பிரபலமானது ரிலையன்ஸ். இந்தக் காலகட்டத்தில் பாலியஸ்டர் துணி என்பது வெளிநாட்டு ரகம்.

ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1977 இல் ஐபிஓ வெளியிட்டு ஏழு மடங்கு அதிகமாக முதலீட்டை பெறும் அளவுக்கு வெற்றியை கண்டது.
1979 ஆம் ஆண்டில், ஒரு ஜவுளி நிறுவனமான சித்பூர் மில்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் E. I. du Pont de Nemours & Co உடன் நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் மகாராஷ்டிராவின் ராய்காட், படல்கங்காவில் பாலியஸ்டர் இழை நூல் ஆலையை நிறுவுவதன் மூலம் நிறுவனம் தனது பாலியஸ்டர் நூல் வணிகத்தை விரிவுபடுத்தியது.
1985 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்பதில் இருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என மாற்றப்பட்டது. பெட்ரோலிய பொருட்களில் இருந்து பாலியஸ்டர் தயாரிப்பது தான் முக்கியப் பணியாக இருந்த நிலையில், ஏன் பெட்ரோலியத்தை முழுநேர வர்த்தகமாகச் செய்யக் கூடாது என்ற யோசனை திருபாய் அம்பானிக்கு வந்தது. இது 2வது முக்கியத் தருணமாகத் திருபாய் அம்பானிக்கு இருந்தது.

இந்தக் கட்டத்தில் தான் திருபாய் அம்பானி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் இறங்க முடிவு செய்து குஜராத்தில் ஹசிரா பெட்ரோ கெமிக்கல் ஆலை 1991-92 இல் தொடங்கினார். இதன் பின்பு டெலிகாம், நிதியியல், கடன், இன்சூரன்ஸ், டெக்ஸ்டைல், பெட்ரோலியம் பொருட்கள் என ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் வேகமாக வளர துவங்கியது.


Click it and Unblock the Notifications