திருபாய் அம்பானி 1932 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சோர்வாட் கிராமத்தில் பிறந்து, பின்னாளில் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபராக உருவெடுத்தார். எளிமையான தொடங்கங்களைக் கொண்டிருந்த அவரது வாழ்க்கையானது பல தலைமுறை இந்திய தொழில்முனைவோருக்கு ஒரு முன்னோடியாக விளங்கியது.
தொலைநோக்கு சிந்தனையுடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிறுவிய திருபாய் அம்பானி மாபெரும் வெற்றியைப் பெற்றார். அப்படிப்பட்ட திருபாய் அம்பானி பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்காத சில விஷயங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

குஜராத் மாநிலம் சோர்வாட் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரின் இரண்டாவது மகன் திருபாய் அம்பானி. குடும்பச் சூழல் காரணமாக தனது படிப்பைப் பத்தாம் வகுப்போடு நிறுத்த வேண்டியிருந்தது. இருப்பினும் திருபாய் அதைப் பற்றி கவலைப்படாமல் தன் குடும்பத்தாருக்கு உதவுவதற்காகக் கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார்.
1949 ஆம் ஆண்டில் அவரது 17ஆவது வயதில் ஏமன் நாட்டின் ஏடனில் திருபாய்க்கு ஒரு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஏ.பெஸ்ஸி அண்டு கோ கம்பெனியில் டிஸ்பாட்ச் கிளார்க்காக வேலை. ஷெல் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான டிஸ்ட்ரிபியூட்டராக பெஸ்ஸி கம்பெனி இருந்தது. அதில் ஏடன் துறைமுகத்தில் இருந்த எண்ணெய் நிரப்பும் ஸ்டேஷனை பொறுப்பாகக் கவனிக்கும் வேலை திருபாய்க்கு.
இந்த வேலையானது தான் ஒரு ஆயில் ரிஃபைனரியைத் தொடங்க வேண்டும் என்ற ஐடியாவை அவர் மனதில் விதைத்தது. இந்த கனவை அவர் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் ரிலையன்ஸ் மூலம் பெட்ரோகெமிக்கல் துறையில் நுழைந்து நிறைவேற்றினார்.
1958இல் இந்தியாவுக்கு திருபாய் திரும்பியதும் முதல் வேலையாக ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் என்ற மசாலா டிரேடிங் கம்பெனியைத் தொடங்கினார். இதனிடையே நூல் டிரேடிங்கில் உள்ள பிரகாசமான வாய்ப்பை அறிந்து கொண்டு தனது கவனத்தை அதை நோக்கித் திருப்பினார். 1962இல் தனது கம்பெனி பெயரை ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் எனப் பெயர் மாற்றினார்.
1966இல் குஜராத்தின் நரோடாவில் ஒரு டெக்ஸ்டைல் மில்லைத் தொடங்கினார். 1977இல் இந்தியாவின் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பட்டியலிடப்பட்டது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து விலகி நின்ற நடுத்தர வர்க்கத்தினரை அதில் பங்கு பெறுமாறு அழைப்பு விடுத்து, அதில் வெற்றியும் பெற்றார். அவரது நிறுவன ஐபிஓ பெரும் வரவேற்பைப் பெற்றதன் மூலம் மக்களின் வரவேற்பையும் ஆதரவையும் பெற முக்கிய காரணம் VIMAL பிராண்ட்.
1991இல் பெட்ரோகெமிக்கல் தொழிலில் இறங்கிய திருபாய் அம்பானி,
பெட்ரோகெமிக்கல் பொருட்களைத் தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் ஹாஜிரா நிறுவனத்தைத் தொடங்கினார். இந்தியாவில் ஒரே இடத்தில் மிகப் பெரிய முதலீட்டில் தொடங்கப்பட்ட முதல் நிறுவனமாக அவரது ஹாஜிரா உருவெடுத்தது.
அதேசமயத்தில் அவர் ஜாம்நகரில் ஒரு ரிஃபைனரியை அமைக்க திட்டமிட்டார். புயல் போன்ற பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும் தான் திட்டமிட்டதற்கு முன்பாகவே 1999இல் உலகின் மிகப் பெரிய ரிஃபைனரியை ஜாம்நகரில் அமைத்தார்.
இந்தநிலையில் 2002 ஜூலை 6 ஆம் தேதியன்று திருபாய் அம்பானி காலமானார். ஆனாலும் அவரது மரபு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மூலமாக இன்றளவும் தொடர்கிறது. லாபம் கொழிக்கும் டாப் 500 நிறுவனங்களில், ஒன்றாகவும் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கார்ப்பரேஷன்களில் ஒன்றாகவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் அவர் செய்த குறிப்பிட்ட சாதனைகளை கௌரவிக்கும் வகையில் நாட்டின் குடிமக்களுக்கான இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் பட்டம் 2016இல் மத்திய அரசால் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications