இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றிலேயே ஒரு பெரிய வணிக நகர்வாக, மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமை விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியை வைத்திருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) நிறுவனம், ஐபிஎல் உரிமையை விற்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அடார் பூனாவாலா, USL-லின் முழுப் பங்கையும் வாங்குவதற்கான விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை துவங்கியிருப்பதாக
கூறப்படுகிறது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு மதுபான நிறுவனமான டியாஜியோவின் (Diageo) துணை நிறுவனமான USL, இந்த உரிமையை சுமார் 2 பில்லியன் டாலர் (அதாவது ரூ.17,762 கோடி) என்ற விலைக்கு விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த மதிப்பீடு உண்மையாகும்பட்சத்தில், RCB அணி உலகிலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக உயரும். இந்த விற்பனைக்கான ஆலோசகராக உலகளாவிய முதலீட்டு வங்கியான சிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு காரணம் என்ன..?: கடந்த சில ஆண்டுகளாகவே, டியாஜியோ நிறுவனம் இந்த உரிமையை விற்பதற்கு தயாராக இருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. குறிப்பாக, 2025 ஐபிஎல் கோப்பையை RCB வென்றபோது பெங்களூருவில் நடந்த கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததன் வதந்திகள் உச்சத்தை அடைந்தன. ஆனால், தற்போது விற்பனையாளர்களே முன்வந்து, அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, டயாஜியோ இந்தியாவின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பிரவீன் சோமேஸ்வர், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "RCB ஒரு உற்சாகமான வணிகம் என்றாலும், இது டியாஜியோவின் முக்கிய வணிகம் அல்ல" என்று தெரிவித்திருந்தார்.
ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட வெல்லாதபோதும், RCB அணி உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய அணிகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் மாபெரும் கிரிக்கெட் நட்சத்திரமான விராட் கோலியை அவர்கள் தக்க வைத்துக் கொண்டதாலேயே. கோலியும் தனது எஞ்சிய கிரிக்கெட் வாழ்க்கையை RCB அணிக்காகவே அர்ப்பணித்துள்ளார்.
ஐபிஎல் அணியின் விற்பனை இது முதல் முறையல்ல. சமீபத்தில், வெறும் 4 ஆண்டுகள் பழமையானதும், RCB-யுடன் ஒப்பிடுகையில் குறைவான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பதுமான குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் 67% பங்குகளை டொரண்ட் குழுமம் வாங்கியது. அந்த ஒப்பந்தம் குஜராத் அணியை சுமார் ரூ.7,500 கோடிக்கு மதிப்பிட்டிருந்தது.
புதிய சாதனை படைக்குமா RCB..?: இந்த விற்பனை குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி, இந்த விற்பனை ஒரு புதிய சாதனை மதிப்பீட்டை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்றது, அதன் வலுவான ரசிகர்கள் மற்றும் சிறந்த நிர்வாகத்தின் மூலம், ஒட்டுமொத்தமாக விற்கப்படக்கூடிய ஒரே அணியாக RCB இருக்கலாம். இது நிச்சயமாக புதிய சாதனை மதிப்பீட்டை அமைத்து, மற்ற ஐபிஎல் அணிகளுக்கான அடிப்படை விலையாக மாறும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications