உலக அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு, ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டும் தங்களுடைய ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாலியாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
வைர உற்பத்தி நிறுவனமான கிரன் ஜெம்ஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை தங்களுடைய நிறுவனம் செயல்படாது என்றும் தங்களிடம் பணியாற்றும் 50 ஆயிரம் ஊழியர்களுக்கும் 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கிரண் ஜெம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தற்போது சர்வதேச அளவில் பாலிஸ் செய்யப்பட்ட வைரங்களுக்கான தேவை குறைந்திருக்கிறது. இதனால் வைர உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.

ஏற்கனவே இருக்கும் வைரங்களை விற்பனை செய்த பிறகு புதிதாக உற்பத்தி செய்து கொள்ளலாம் என்ற முடிவினை எடுத்து இருக்கும் கிரண் ஜெம்ஸ் நிறுவனம் உற்பத்தியை குறைப்பதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. கிரண் ஜேம்ஸ் நிறுவனத்தின் தலைவரான வல்லபாய் லக்கானி இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில் தங்களுடைய நிறுவன வரலாற்றிலேயே முதன்முறையாக வைர உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ரஷ்யா உக்ரைன் இடையிலான சண்டை தொடங்கியதை அடுத்து ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட வைரங்களுக்கு ஜி 7 நாடுகள் தடைவிதித்துள்ளன .அதேபோல அமெரிக்காவும் ரஷ்யா மற்றும் ரஷ்யா சார்ந்த பொருட்கள் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

குறிப்பிட்ட பிராந்தியங்களில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்டவை காரணமாகவும் வைரம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது வைரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு அதற்கான தேவை இல்லாததன் காரணமாக இந்த தொழிலில் தற்போது மந்தநிலை உண்டாகியுள்ளது.
சர்வதேச அளவில் பாலிஷ் செய்யப்பட்ட வைரத்தின் விலை சரிந்திருப்பதாக கூறும் லக்கானி வைர உற்பத்தியாளர்களுக்கு தொழிலை நடத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் விநியோகத்தை கட்டுப்படுத்தினால் தேவை அதிகரிக்கும் எனவே வைர உற்பத்தியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
கிரண் ஜெம்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டக்கூடிய ஒரு நிறுவனமாகும். இது சர்வதேச அளவில் மிகப்பெரிய வைர உற்பத்தி நிறுவனமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 50000 ஊழியர்கள் இவர்களிடம் பணி புரிகின்றனர்.
இவர்களில் 40,000 பேர் இயற்கையான வைரங்களையும் 10,000 பேர் ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரங்களையும் பாலிஸ் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த பத்து நாட்கள் விடுமுறைக்கு தேவையான பணமானது தங்களது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது என லக்கானி தெரிவித்துள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications