சில காலமாக தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் சிறந்த ஊழியர்களுக்கு கார்களை பரிசளிக்கும் போக்கு தொடர்கதை ஆகிறது. அந்த வகையில் ஒரு லிங்க்டின் பதிவு பிரபலமாகி வருகிறது. அதில் ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரான நிதின் காமத் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசாக வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.
நிதி கல்வியாளரான மினல் உதேஷி என்பவர் லிங்க்டின்-ல் ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளார். அதில் 2023-ஆம் ஆண்டில் ஜெரோதா நிறுவனத்தின் நிறுவனரும் கோடீஸ்வரருமான நிதின் காமத் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த ஊழியர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை பரிசளித்ததாகவும், போனசுக்கு பதிலாக பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற உயர்ரக கார்களை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பொதுவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முழுக்க முழுக்க வருமான வரிக்கு உட்பட்டது. ஆனால் பரிசாக கார்கள் வழங்கப்படும் போது அதன் வரிவிதிப்பு முறை மாறுபடலாம். பணம் இல்லாமல் வழங்கப்படும் விஷயங்களுக்கு வரி சலுகைகளும் உண்டு. இதன் மூலம் ஊழியர்களும் சரி, நிறுவனமும் சரி வரி சுமையை குறைக்க முடியும். அதோடு அதே மதிப்புள்ள பணத்தை சம்பளமாக கொடுப்பதை விட காரை பரிசாக கொடுப்பதன் மூலம் ஊழியர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியின் அளவும் குறையும்.
கார் ஒரு தேய்மானம் அடையக்கூடிய சொத்து என்பது உண்மைதான். இதனால் காலப்போக்கில் அதன் மதிப்பு குறையலாம். ஆனால் நிறுவனங்கள் ஒரு காரை ஊழியர்களுக்கு பரிசாக வழங்கும்போது அந்த காரின் செலவுகளை நிறுவனத்தின் செலவாக காண்பிக்க முடியும். இது நிறுவனத்திற்கு வரி விதிக்கக்கூடிய வருமானத்தை குறைக்க உதவும். வழக்கமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ் அல்லது சம்பள உயர்வு போன்றவற்றை மட்டுமே நேரடி செலவாக காண்பிக்க முடியும். ஆனால் சொத்தை வாங்கி அதை ஊழியர்களின் பயன்பாட்டிற்கு கொடுக்கும் போது அதன் மதிப்பையும் செலவாக காட்ட முடியும் என்பது கார்களை நிறுவனங்கள் பரிசளிப்பதில் இருக்கும் கூடுதல் நன்மைகள்.
வழக்கமாக ஊழியர்களுக்கு டிவிடெண்ட் அல்லது எம்பிளாயி ஸ்டாக் ஆப்ஷன் போன்றவை வழங்கப்படும். இப்படி டிவிடெண்ட் வழங்கப்பட்டால் அது பங்குதாரர்களின் வருமானமாக கருதப்பட்டு. அதற்கும் வரி விதிக்கப்படலாம். அதேபோல எம்பிளாயி ஸ்டாக் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டாலும்.. அதற்கும் வரி விதிக்கப்படும். இவை நேரம் எடுக்கும் செயல்முறையாக இருப்பதோடு சில நேரங்களில் குழப்பமானதாகவும் இருக்கலாம்.
எனவே கார்களை பரிசாக வழங்குவது இந்த சிக்கல்களை தவிர்க்கும். நேரடி சொத்து என்பதால் ஆவண வேலைகள் எதுவும் இருக்காது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் வரி அறிக்கை தாக்கல் செய்யும்போது இது போன்ற பரிசளிப்புகள் பெரிதாக சிக்கலை ஏற்படுத்தாது என்றும் உதேஷி கூறியிருந்தார்.
அதோடு சம்பளத்திற்கு பதிலாக இது போன்ற சொத்துக்களை பரிசளிப்பது ஊழியர்களுக்கு உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிறுவனங்களோடு இன்னும் இணக்கத்தை ஏற்படுத்தும். எப்படி பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவது என்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம் என்று உதேஷி கூறி இருந்தார். இந்த பதிவு விரைவில் பிரபலமானது. புத்திசாலித்தனமாக பணத்தை பயன்படுத்தியதற்காக நெட்டிசன்கள் நிதின் காமத்துக்கு பாராட்டு தெரிவித்தனர். இருப்பினும் நிதின் காமத் இது ஒரு வதந்தி என்று தெளிவுபடுத்தியுள்ளார். தனது ஊழியர்களுக்கு சொகுசு கார்களை பரிசளிக்கவே இல்லை என்று மறுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications