வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்துவிட்ட நிலையில், வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாதவர்கள் என்னென்ன பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்து நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நமது வருமான வரி சட்டத்தின் அடிப்படையில் வருமான வரி உச்ச வரம்பிற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்திருக்க வேண்டும். இவ்வாறு அதிக வருமானம் இருந்தும் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய தவறியவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
1. அபராதம்: காலக்கெடுவுக்கு பின்னர் வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்குள் இருந்தால் 1,000 ரூபாய் அபராதம், 5 லட்சத்திற்கு மேல் இருந்தால் 5,000 ரூபாய் அபராதம்.

2. ஒரு வேளை நீங்கள் வரி பாக்கி வைத்திருந்தால் அந்த தொகை எவ்வளவோ அதில் மாதத்திற்கு ஒரு சதவிகிதம் என அபராத வட்டி விதிக்கப்படுகிறது.
3. டிடிஎஸ் உள்ளிட்ட மூலத்திலேயே கழிக்கப்பட்ட வரிகளை நீங்கள் திரும்ப கோர முடியாது. நீங்கள் தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால் வரி தொகையை திரும்ப பெறுவதும் தாமதமாகும்.
4. ஆகஸ்ட் 1 முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள் பழைய வரி நடைமுறையை பயன்படுத்த முடியாது. எனவே பழைய வரி நடைமுறையில் கிடைக்கும் வரி சலுகைகள் எதுவும் கிடைக்காது. வருமான வரி தளத்தில் புதிய வரி முறையில் மட்டுமே கணக்கை தாக்கல் செய்வதற்கான விருப்பம் காட்டும். இதனால் வரி சேமிப்புக்காக நீங்கள் செய்த முதலீடுகள் எந்த பலனையும் தராது.
5. இழப்பீடுகளை முன்னெடுத்து செல்லுதல் முடியாது. அதாவது நீங்கள் வணிகம் அல்லது மூலதன இழப்புகளை சந்தித்து இருந்தால் நீங்கள் உங்களது வருமான வரி கணக்கினை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாமல் இருந்தால் எதிர்கால லாபங்களுக்கு எதிராக இந்த இழப்புகளை நீங்கள் கோர முடியாது. எனவே எதிர்காலத்தில் நீங்கள் வரி கணக்கினை தாக்கல் செய்யும்போது இது உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.
6. ஃப்ரீலேன்சர் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் வருமானத்திற்கான மிக முக்கியமான சான்றாக இருப்பது வருமானவரி கணக்குத் தாக்கல்தான். சில சமயங்களில் நீங்கள் வருமானத்திற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்போது நீங்கள் கணக்கினை தாக்கல் செய்வதற்கான ஆவணத்தை வழங்கினால் போதும்.
7. நீங்கள் ஒரு கடன் வாங்குவதற்கு விண்ணப்பம் செய்கிறீர்கள் எனும் போது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உங்களின் வருமானவரி கணக்கு தாக்கல் விவரங்களை கோருகின்றன. இதன் மூலம் உங்களது வருமானம் குறித்த வரலாற்றை பெற்று அதன் அடிப்படையில் அவர்களால் கடன் தொகையை தீர்மானிக்க முடியும்.
8. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு நீங்கள் விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது உங்களது வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களை கேட்பார்கள். ஒருவேளை நீங்கள் சமர்ப்பிக்கவில்லை எனில் உங்களின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
9. நீங்கள் 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் வரி செலுத்த வேண்டி இருக்கிறது ஆனால் கணக்கினை தாக்கல் செய்யவில்லை எனில், 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் பெறலாம், 25,000 ரூபாய்க்கு கீழ் நீங்கள் வரி செலுத்த வேண்டியது இருந்தால் 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் பெறக்கூடும்.


Click it and Unblock the Notifications