மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் போரின் தாக்கம் இந்தியாவின் எரிசக்தி துறையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்த போர் முடிவுக்கு வருமா என்பது பெரும் கேள்வியாக இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதை தாண்டி அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு தளத்தை தான் குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் உற்பத்தியும் குறைந்துள்ளது.
இதன் விளைவாக, இந்த எண்ணெய் விலை உயர்வு மூலம் ஏற்பட்டுள்ள நிதியியல் ரீதியான சுமையை அரசு கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க முடிவு செய்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.

முதலில் ப்ரீமியம் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசின் கீழ் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது டீசல் விலையை உயர்த்தியுள்ளது. எப்படி ப்ரீமியம் பெட்ரோல் விலை மூலம் அதிகப்படியான மக்களை பாதிக்காத வகையில் விலையை உயர்த்தியதோ, இதேபோல் டீசல் விலை உயர்வையும் இதே பார்மூலா-வை பயன்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் bulk பயனாளர்களுக்கான டீசல் விலையை லிட்டருக்கு சுமார் 22 ரூபாய் (25% உயர்வு) உயர்த்தியுள்ளன. இந்த திடீர் உயர்வு படம் ரிலீஸ் ஆகும் முன் வரும் டிரைலர் போல் இருக்கிறது, கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் வைத்திருந்த நிறுவனங்கள் வெறும் 3 வார போர் காலத்தில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை நுகர்வோருக்கு மாற்றி வருகிறது.
டீசல் விலை உயர்வு - யாருக்கு பாதிப்பு?
இந்த புதிய விலை மாற்றம் பொதுமக்கள் பயன்படுத்தும் சில்லறை (retail) டீசல் விலைக்கு பொருந்தாது. ஆனால், bulk பயனாளர்களான ரயில்வே, பாதுகாப்புத்துறை, சுரங்கத் துறை, உற்பத்தி நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவை நேரடியாக பாதிக்கப்படுகின்றன. டெல்லியில் bulk டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.67 இருந்து ரூ.109.59 ஆக உயர்ந்துள்ளது.
முக்கியமாக, மாநில போக்குவரத்து கழகங்கள் இந்த உயர்விலிருந்து விலக்கு பெறுகின்றன. ஆனால், தனியார் துறையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தங்கள் சொந்த டிப்போக்களில் எரிபொருள் நிரப்பும் லாரிகள் புதிய கட்டணத்தில் டீசல் வாங்க வேண்டிய நிலை இருக்கும் காரணத்தால் அதிக செலவை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு
தற்போது மத்திய அரசின் கீழ் செயல்படும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டீசல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ரூ.32 இழப்பை சந்தித்து வருகின்றன. இதனால் ஏற்பட்ட நிதிச்சுமையை குறைக்க இந்த ரூ.22 உயர்வை நுகர்வோர் தலையில் இறக்கியுள்ளது. எனினும், இந்த உயர்வு முழுமையான இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுவதாவது, பெரிய அளவில் எரிபொருள் பயன்படுத்தும் நிறுவனங்கள் சந்தை விலைக்கு அருகில் பணம் செலுத்துவது, அரசின் நிதிச்சுமையை கட்டுப்படுத்த உதவும். இல்லையெனில், இந்த இழப்புகள் இறுதியில் அரசின் மீது சுமையாக மாறும் அபாயம் உள்ளது.
பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு
டீசல் விலை உயர்வுக்கு முன்பு, பிரீமியம் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் XP95 பெட்ரோல் டெல்லியில் ரூ.99.89 இலிருந்து ரூ.101.89 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இந்த பிரீமியம் பெட்ரோல் மொத்த பெட்ரோல் விற்பனையில் வெறும் 5% மட்டுமே இருப்பதால், அதன் தாக்கம் மக்களுக்கு குறைவாகவே இருக்கும்.
சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு உடனடி பாதிப்பு ஏற்படாது என கூறப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்
bulk பயனாளர்களுக்கு டீசல் விலை உயர்ந்ததால், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக, பொருட்களின் ரீடைல் விலையும் உயரக்கூடும். இதுவே பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் முக்கிய காரணமாக மாறும். இதனால் பெட்ரோல், டீசல் விலை மறைமுகமாக சாமானிய மக்களை பாதிக்கும்.
ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் அதன் தாக்கத்தைத் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. bulk டீசல் விலை உயர்வு மூலம் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை குறைக்க முயன்றாலும், இது நீண்டகாலத்தில் பொருளாதாரத்துக்கும் பொதுமக்களுக்கும் மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications