இந்திய ரிசர்வ் வங்கி தற்போது நடைமுறையில் உள்ள காகித பணம் மற்றும் உலோக காயின்களுக்கு மாற்றாக, டிஜிட்டல் ரூபாயினை அறிமுகம் செய்யவுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதல் கொண்டே கருப்பு பணம் ஓழிப்பு மற்றும் கள்ள நோட்டுகளை அகற்ற டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகின்றது. இது தவிர பற்பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
அந்த வகையில் இந்த டிஜிட்டல் கரன்சியானது நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அடுத்த டிஜிட்டல் படிக்கல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆரம்பம் முதல் கொண்டே டிஜிட்டல் வளர்ச்சியினை ஊக்குவித்து வரும் நிலையில், இது டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
அதெல்லாம் சரி உங்கள் கைகளில் இருக்கும் பணத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றேனும் யோசித்தது உண்டா? பலரும் கிரிப்டோகரன்சிகள் தான் எதிர்காலம் என யோசித்திருக்கலாம். ஆனால் இன்றும் பல நாடுகளில் கிரிப்டோகரன்சிகள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு நாடும் CBDC பற்றி யோசித்து வருகின்றன.
கிரிப்டோகரன்சி Vs டிஜிட்டல் ரூபாய்
கிரிப்டோகரன்சிகளை யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வருகின்றது. இதில் பாதுகாப்பு என்பது இல்லை. ஒரு ஒழுங்குபடுத்தல் என்பது இல்லை.
அதேசமயம் டிஜிட்டல் ரூபாயினை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். இதனால் ஒவ்வொரு ரூபாய் பரிமாற்றமும் கணக்கில் வரும். இதனை சர்வதேச அளவில் இந்தியாவில் பரிவர்த்தனையை கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயன் என்ன?
எல்லாவற்றுக்கும் மேலாக இதன் மூலம் மோசடிகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஊழல் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்பவர்கள், வெளி நாடுகளில் இருந்து பணிபுரியும் இந்தியர்கள் அனுப்பவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் பொருளாதாரம் வலுப்படும்
இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் பண பரிவர்த்தனையை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் கரன்சி என்பது மின்னணு வடிவில் இருக்கும் ஒரு பிரத்யேக நாணயமாகும். இதை ஏற்கனவே பெரும்பாலான நாடுகள் கொண்டுள்ளன. இந்த டிஜிட்டல் நாணயங்களில் மூன்று வகைகள் உள்ளன. ஒன்று கிரிப்டோகரன்சி, இரண்டாவது ஸ்டேபிள் காயின்கள், மூன்றாவது CBDCs எனப்படும் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயமாகும்.
CBDCs என்றால் என்ன?
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDCs) என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கியால் வெளியிடப்படும் டிஜிட்டல் நாணயமாகும். இது பிட்காயின் போல் தான் என்றாலும், ரிசர்வ் வங்கி மூலம் நிர்வகிக்கப்படும். இது அரசின் முழு ஆதரவினையும் பெற்றிருக்கும். இதில் கிரிப்டோகரன்சிகளை போல பெரியளவில் மாற்றம் இருக்காது. இந்த டிஜிட்டல் ரூபாய் மதிப்பு, ரூபாய்க்கு நிகராகவே இருக்கும்.
பயன்கள்
இதன் மூலம் எளிதில் விரைவாக பணபரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். குறிப்பாக சர்வதேச அளவில் செய்யும் போது குறைந்த கட்டணத்தில் செய்து கொள்ளலாம். உங்களால் 24 மணி நேரமும் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். பிசிகல் நோட்டுகளை போல வங்கிகள் அல்லது ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க அலைய வேண்டியதில்லை. கூடுதல் கட்டணம் எதுவும் நீங்கள் கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.
எப்படி இருப்பினும் இந்த டிஜிட்டல் ரூபாய் குறித்து முழுமையாக அமலுக்கு வந்த பிறகே இது பற்றி முழுமையான புரிதல் என்பது இருக்கும். இதன் பலன்களும் தெரியவரும்.


Click it and Unblock the Notifications