சென்னை: பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை அரசு தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதிதாக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த "மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்". இந்தத் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்கலாம், எங்கு விண்ணப்பிக்க வேண்டும் போன்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது பெண்களுக்கான பிரத்தியேக திட்டம் ஆகும். மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க எந்த வித வயது வரம்பும் கிடையாது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோரின் பெயரில், இந்தத் திட்டத்தினை தொடங்கலாம். நடந்து முடிந்த பட்ஜெட்டில், இந்த சிறு சேமிப்புத் திட்டத்தினை பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

"Mahila Samman Savings Certificate" என்று சொல்லப்படுகிற "மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்" திட்டத்தினை பயன்படுத்தி, பெண்கள் ரூ. 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 7.5 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டம் மார்ச் 31 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டு வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
இந்தத் திட்டத்தை எங்கு தொடங்கலாம்?: மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தினை, நீங்கள் அருகில் உள்ள எந்த போஸ்ட் ஆபீஸ்களில் வேண்டுமானாலும் தொடங்கலாம். மேலும் சில வங்கிகளின் முக்கிய கிளைகளில், இந்த திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, 2023 ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும், பெண்கள் விண்ணப்பிக்க முடியும்.
குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 ரூபாய் முதல் அதிகபட்ச முதலீடாக ரூ. 2 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். மேலும் நீங்கள் செய்யும் முதலீடுகள் 100 இன் மடங்குகளாக இருக்க வேண்டும். இந்த வகை முதலீட்டை தொடங்க முக்கிய ஆவணங்களாக ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை கருதப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு, அரசு செலுத்தும் வட்டியானது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 2 வருடங்கள். அதற்கான படிவத்தைப் பெற்று, நீங்கள் முதிர்வு காலம் முடிந்த பின், உங்களது தொகையை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் முதலீடு செய்ய துவங்கியதில் இருந்து ஒரு வருடம் கழித்த பின்னர் நீங்கள் செலுத்திய முதலீட்டு தொகையில் 40 சதவீத தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்த நபர் திடீரென இறந்துவிட்டால் அவர்களுடைய முழு தொகையும் திரும்பி அளிக்கப்படும். மேலும் முதிர்வு காலத்திற்கு முன்பே இந்த தொகையை பெற இயலும். ஆனால் கணக்கு ஆரம்பித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பிறகு இதனை முடித்துக் கொள்ள முடியும். அப்படி முடிக்கும் கணக்குகளுக்கு 2 சதவீத அபராத வட்டி கழிக்கப்பட்டு, அதுவரைக்கும் உள்ள தொகைக்கு 5.5 சதவீத வட்டி மட்டுமே வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications