இந்தியா முழுவதும் இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ரீடைல் நிறுவனங்கள் நுகர்வோர் சந்தையில் இருக்கும் பல பொருட்களின் விலையை 8 முதல் 10 சதவீதம் வரையில் உயர்த்த திட்டவட்டமாக முடிவு செய்துள்ளது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா தொற்றில் இருந்து மேகமாக மீண்டும் வரும் இந்திய வர்த்தகச் சந்தைக்குப் பண்டிகை கால வர்த்தகம் மிகப்பெரிய அளவில் உதவியது. இந்நிலையில் இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, சீனா ஆகிய அனைத்து முன்னணி நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உற்பத்தி பொருட்கள், இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது.
உற்பத்தி பொருட்களின் விலை
இந்தியாவில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு மற்றும் சப்ளை செயினில் அதிகரித்துள்ள செலவுகள் ஆகியவற்றின் மூலம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ரீடைல் நிறுவனங்கள் ஆடை, எலக்ட்ரானிக்ஸ், மதுபானம் மற்றும் அழகு சாதன பொருட்களின் விலையை 8 முதல் 10 சதவீதம் வரையில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
புத்தாண்டுக்குப் பின்
மேலும் மளிகை பொருட்கள், பர்சனல் கேர் பொருட்கள், பேக்கேஜ் உணவுகள் மற்றும் ஹோட்டல் சேவைகள் சார்ந்த நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்த நிலையில், ஏற்கனவே தனது தயாரிப்பு விலையை அதிகரித்துள்ளது. இதோடு புத்தாண்டில் மீண்டும் ஒரு முறை விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை கால வர்த்தகம்
பண்டிகை காலத்தில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று கொரோனாவுக்கு முந்தைய வர்த்தக அளவீட்டைத் தொட்டு உள்ளது. இந்த நிலையில் வர்த்தகத்தைத் தொடர்ந்து அடுத்த சில காலாண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதில் குறியாக அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு உள்ள நிலையில் இந்தச் செலவுகள் பிரச்சனை பெரும் தடையாக உள்ளது.
விலை உயர்வு கட்டாயம்
உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ள வேளையில், நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் விலையை அதிகரிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது எனக் குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் புதிய சுமையை ஏற்க யாருக்கும் நிதிநிலை சிறப்பாக இல்லை என்பது நிறுவனங்களின் கருத்தாக உள்ளது.
முக்கியப் பொருட்களின் விலை
உதாரணமாகக் கண்ணாடி, பருத்தி, ஸ்டீல், காப்பர், கம்பியூட்டர் சிப் மற்றும் கெமிக்கல் ஆகியவை உற்பத்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பருத்தி நூல் விலை கடந்த வருடத்தைக் காட்டிலும் சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்த கார்மென்ட் துறையையும் பாதித்துள்ளது. இதன் காரணமாகவே ஆடைகளின் விலை உயர போகிறது எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
10-15% விலை உயர்வு
2021ல் உற்பத்தி பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல ஒரு முறைக்கு இரு முறை விலையை உயர்த்தியது மறக்கமுடியாது. இந்த நிலை தான் தற்போது அனைத்து துறையிலும் ஏற்பட்டு உள்ளது. புத்தாண்டுக்குப் பின்பு சந்தையில் 80 முதல் 90 சதவீத பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரையில் விலை உயரலாம்.


Click it and Unblock the Notifications