மத்திய நிதி அமைச்சகம் இந்தியாவின், பொதுத் துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஏர் இந்தியா, கண்டய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளை இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்குள் விற்று வருவாயை அதிகரிக்கத் திட்டம் போட்டு இருந்தது.
இந்த விற்பனை மூலம் வரும் வருமானத்தைத் தான் ஆங்கிலத்தில் Disinvestment என்று சொல்கிறோம். இந்த டிஸ் இன்வெஸ்மெண்ட் மூலம் வர வேண்டிய வருவாய் மட்டும் சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்கள். இன்னும் சரியாக 3 மாதங்களில் இந்த நிதி ஆண்டே முடிந்து விடும் போல் இருக்கிறது. ஆனால் போகிற போக்கைப் பார்த்தால், இந்த மூன்று டீலும் முடிந்து அரசுக்கு தேவையான வருவாய் பணம் வராது போல் இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

ஏன் இந்த வருடத்தில் முடியாதா எனக் கேட்டால், பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கான பாதையில் பல தடைகளும் ஆச்சர்யங்களும் வந்து கொண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள் அமைச்சக வட்டாரத்தில் விவரம் தெரிந்தவர்கள்.
கடந்த நவம்பர் 2019-ல் தான், மத்திய அரசின் பொருளாதார விவகார கேபினெட் கமிட்டி பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்தியாவின் மிகப் பெரிய ஷிப்பிங் நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் கண்டய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகளை விற்க அனுமதி கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 53.3 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறார்கள். அதே போல ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 63.75 சதவிகித பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. கண்டய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் 54.89 சதவிகித பங்குகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
ஏர் இந்தியாவோ சுமார் 58,000 கோடி ரூபாய் கடனில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது. அதோடு நடப்பு ஆண்டுகளில் வரும் நஷ்டம் வேறு தனியாக இருக்கிறது. எனவே இந்த 2019 - 20-க்குள் ஏர் இந்தியா, பிபிசிஎல், கண்டய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களை விற்பது சிரமம் தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications