சென்னை: ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையின் அத்தியாவசிய பகுதியாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில், சிம் கார்டுகள் தகவல் பரிமாற்றத்திற்கு அவசியம். ஆனால், பாரம்பரிய பிளாஸ்டிக் சிம் கார்டுகளை விட, புதிய தொழில்நுட்பமான இ-சிம் கார்டுகள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. இந்த கட்டுரையில், இ-சிம் கார்டு என்றால் என்ன, அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதைப் பற்றி காண்போம்.
இ-சிம் (Embedded SIM) என்றால் என்ன?: இ-சிம் என்பது எம்பட் செய்யப்பட்ட சிம் ஆகும். இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களில் நிரந்தரமாக பதிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் சிப் ஆகும். பாரம்பரிய பிளாஸ்டிக் சிம் கார்டுகளைப் போல அல்லாமல் இது போன்களிலேயே பொருந்தியிருக்கும். பாரம்பரிய பிளாஸ்டிக் சிம் கார்டுகளைப் போல் இதை நீங்கள் அகற்றவோ மாற்றவோ முடியாது.

இந்தியாவில் இ-சிம் கார்டுகளை Airtel, Jio மற்றும் Vodafone, Idea ஆகியவை செல்லுலார் பிளான்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.
இ-சிம் கார்டின் நன்மைகள்:
இட வசதி: இ-சிம் கார்டுகள் பாரம்பரிய சிம் கார்டுகளை விட மெலிதானவையாக இருக்கும். இதனால் இவை குறைந்த இடத்தை எடுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மெலிதான மற்றும் ஸ்டைலான டிசைன்களை உருவாக்க முடியும்.
அதிகரித்த பாதுகாப்பு (Security): இ-சிம் கார்டுகள் தொலைந்துபோக வாய்ப்புகள் குறைவு. ஏனெனில், அவற்றை அகற்ற முடியாது. மேலும், இவை பின் பாதுகாப்பு அம்சங்களுடன் வருகின்றன. இது உங்கள் டேட்டாக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
இ-சிம் கார்டின் தீமைகள்:
கிடைக்கும் தன்மை: இ-சிம் தொழில்நுட்பம் புதுமையானது என்பதால், அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களிலும் அல்லது அனைத்து மொபைல் ஆபரேட்டர்களிடமும் கிடைக்காது.
பழுது பார்ப்பதில் சிக்கல்: உங்கள் ஸ்மார்ட்போன் பழுதடைது, இ-சிம் சிப்பும் பழுதடைந்திருந்தால், ஃபோனை முழுவதுமாக மாற்றுவது தவிர வேறு வழி இருக்காது.
பயணத்தின் போது சிக்கல்: வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது, உங்கள் உள்ளூர் ஆபரேட்டரிடமிருந்து வெவ்வேறு ஆபரேட்டருக்கு மாறுவது கடினமாக இருக்கலாம்.
இ-சிம் கார்டுகள் பாரம்பரிய பிளாஸ்டிக் சிம் கார்டுகளை விட பல நன்மைகளை வழங்குகின்றன. இருப்பினும், சில தீமைகளும் உள்ளன. இந்த தொழில்நுட்பம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுமா.. இல்லையா.. என்ற விவரங்கள், இனி வரும் நாட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications