டெல்லி: பணிச்சுமையால் 26 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் கல்வியில் ஆன்மீகத்தை கொண்டு வருவது மட்டுமே இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த 26 வயது அண்ணா செபஸ்டியன் பணிச்சுமை காரணமாக கடந்த வாரம் உயிரிழந்தார். சிஏ படிப்பை முடித்து நான்கு மாதங்களுக்கு முன்புதான் அவர் பணியில் சேர்ந்தார். ஆனால் பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் உயிரிழந்தார்.

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அன்னாவின் மரணம் குறித்து அவரது தாயார் எர்னஸ்ட் அண்ட் யங் இந்தியா நிறுவனத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் ஓய்வின்றி நீண்ட நேரம் பணியாற்றியது தான் அவருக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்பை கொடுத்திருக்கிறது என் மகளுக்கு நிகழ்ந்தது வேறு யாருக்கும் நிகழக் கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே அன்னாவின் மரணம் தொடர்பாக கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிஏ படித்து முடித்த ஒரு இளம் பெண்ணால் வேலைப்பளுவை சமாளிக்க முடியவில்லை, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு அவர் பணிச்சுமை காரணமாக இறந்து விட்டதாக செய்திகள் வெளி வந்தன எனக் குறிப்பிட்டார்.
"நீங்கள் என்ன படித்தாலும், எந்த வேலையை செய்தாலும் அதன் அழுத்தத்தை தாங்கும் மனவலிமை இருக்க வேண்டும் அது ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம் என்பதை குடும்பங்கள் கற்றுத் தர வேண்டும்" என அவர் கூறினார்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வாழ்க்கையின் அழுத்தங்களை சமாளிக்க உதவும் வகையில் பாடத்திட்டத்தில் தெய்வீகம் மற்றும் ஆன்மீகத்தை சேர்க்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இதுவே மனவலிமையை அதிகரிக்கும் என்றும் நாட்டுக்கு நன்மை பயக்கும் என்றும் நம்புவதாக அவர் பேசினார்.
கடவுளை நம்புங்கள் அதன் மூலம் உங்கள் ஆத்ம சக்தி அதிகரிக்கும் போது தான் மன வலிமையும் அதிகரிக்கும் எனக் கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் நிர்மலா சீதாராமனின் பேச்சை வன்மையாக கண்டித்துள்ளார்.
பணிச்சுமையால் உயிரிழந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை குற்றம் சாட்டுவது போல நிர்மலா சீதாராமனின் பேச்சு அமைந்திருக்கிறது எனக் கூறியுள்ள வேணுகோபால் இப்படி பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவது வெறுக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
இளம் தொழில் வல்லுனர்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டுவதற்கு தீர்வு காண அரசு தவறிவிட்டது என விமர்சனம் செய்துள்ளார். இளம் ஊழியர்களை பாதுகாக்க தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அவர் ஆளும் கட்சியினருக்கு அதானி, அம்பானியின் வலிகள் மட்டுமே தெரிகின்றன, அவர்களுக்காக உழைத்து உயிரை விடக்கூடிய இளைஞர்களின் வலிகள் தெரியவில்லை என சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications