தீபாவளி மற்றும் தந்தேராஸ் பண்டிகை நெருங்கி வருகிறது. பண்டிகை காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை அதிகரிக்கும். தங்கத்தின் தூய்மையை கண்டறிய எவ்வளவோ முறைகள் இருக்கிறது. அதில் ஹால்மார்க் முத்திரையும் ஒன்று. அதே போல வெள்ளி நாணயங்கள், வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கும் போது அதன் தூய்மையை எப்படி கண்டறிவது? வெள்ளிக்கு ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா? என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தங்கத்திற்கு எப்படி ஹால்மார்க் இருக்கிறதோ.. அதேபோல வெள்ளிக்கும் ஹால்மார்க் இருக்கிறது. அதிக தூய்மை கொண்ட வெள்ளியைப் பயன்படுத்தி எந்த நகையும் செய்ய முடியாது. எப்படி 24 கேரட் தூய தங்கத்தில் நகைகள் செய்ய முடியாதோ அதேபோல சுத்தமான வெள்ளியைக் கொண்டும் செய்ய முடியாது. இவை மிகவும் மென்மையாக இருக்கும். அதில் கீறல் விழவோ அல்லது வளைந்து போகவோ வாய்ப்புள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியிலும் பிற உலோகங்களை கலந்து நகைகள் மற்றும் பாத்திரங்கள் செய்வார்கள்.

தங்கத்தை பொறுத்தவரையில் 22 கேரட், 24 கேரட், 18 கேரட் என்று அதன் தூய்மையை பொறுத்து வகைகள் இருக்கிறது. தங்கம் விலை உச்சத்தை தொட்ட போது 9 கேரட் தங்கமும் விற்பனையானது. 24 கேரட் தங்கம் தான் தூய தங்கம். அதில் 99.9% தூய தங்கம் இருக்கும். 22 கேரட்டில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதைத்தான் 916 தங்கம் என்று அழைக்கின்றனர்.
தங்கமும் மிருதுவான உலோகம் தான். தூய தங்கத்தில் எந்த நகைகளும் செய்ய முடியாது. அதனால் தான் 22 கேரட் தங்கம் என்ற பெயரில் 91.6% தூய தங்கத்தை வைத்துவிட்டு மீதமுள்ள சதவீதத்திற்கு காப்பர் அல்லது பிற உலோகங்கள் கலந்து நகைகளாக செய்யப்படுகிறது.
999 வெள்ளி: 999 என்பது மிகவும் மிருதுவான மற்றும் தூய்மையான வெள்ளி. இதில் 99.9 சதவீதம் தூய்மையான வெள்ளி இருக்கும். பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பாக இருக்கும். இதை வைத்து நாணயங்கள் மற்றும் பார்கள் செய்யலாம். முதலீட்டுக்காக வாங்குபவர்கள் வாங்கலாம்.
925 வெள்ளி: தினசரி பயன்படுத்தப்படும் நகைகளை செய்வதற்கு 925 வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
800 வெள்ளி: 800 வெள்ளி.. 925 மற்றும் 999 வெள்ளியைக் காட்டிலும் விலை குறைவு. கொலுசு, கனமான பூஜை பொருட்கள் போன்றவற்றை செய்வதற்கு இந்த வகை வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி நகைகளில் 90 சதவீதம் 800 மற்றும் 925 வெள்ளியைக் கொண்டே செய்யப்படுகிறது.
2023-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டது. அக்டோபர் 2005-இல் வெள்ளிக்கும் ஹால்மார்க் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்னும் விருப்பத்தின் பெயரில் தான் இதை பயன்படுத்தி வருகின்றனர். ஹால்மார்க் இல்லாத வெள்ளியையும் சட்டப்பூர்வமாக விற்பனை செய்ய முடியும். ஆனால் வெள்ளி நகைகளுக்காக ஹால்மார்க் முத்திரை இருந்தால் அதில் கண்டிப்பாக HUID என்ற 6 இலக்க நம்பர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
BIS அமைப்பு தூய்மை அளவுகளைப் பொறுத்து 800, 835, 900, 925, 958, 970, 990, மற்றும் 999 ஆகிய ரகங்களை அங்கீகரித்துள்ளது.
மொபைலில் வெள்ளி ஹார்மார்க்கை சரி பார்ப்பது எப்படி?: ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி நகைகளாக இருந்தால் அதில் பிஐஎஸ் சின்னம், SILVER என்ற வார்த்தை, தூய்மை எவ்வளவு மற்றும் 6 இலக்க HUID நம்பர் ஆகியவை இருக்கும்.
தூய்மையான வெள்ளி தானா என்பதை தெரிந்துக்கொள்ள ப்ளே ஸ்டோரில் இருந்து பிஐஎஸ் கேர் என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் "Verify HUID" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது 6 இலக்க HUID நம்பரை என்டர் செய்யுங்கள். ஆப்-பில் வெள்ளியின் வகை என்ன? தூய்மை? நகைக்கடை விபரங்கள் மற்றும் புற விபரங்கள் காண்பிக்கப்படும்.


Click it and Unblock the Notifications
