டெல்லி: விழாக்கால பருவம் என்றாலே நிறுவனங்கள் பலவும் ஊழியர்களுக்கு சில சர்ப்ரைஸ் அறிவிப்புகளை கொடுப்பது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது விமானிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு சுமார் 55% அளவுக்கு சம்பள உயர்வினை அறிவித்துள்ளது.
இது ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம்.
விமானிகளுக்கு சம்பள உயர்வு
இது குறித்த அறிக்கையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் 80 மணி நேரம் வரையில் விமானத்தை இயக்கும் விமானிகளுக்கு , சுமார் 55% சம்பள உயர்வு அதிகரிக்கப்பட்டு 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது நவம்பர் 1 முதல் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவுக்கு முந்தைய சம்பளம்
ஸ்பைஸ்ஜெட்-ன் இந்த அதிகரிப்புக்கு பிறகு விமானிகளுக்கு சம்பள விகிதமானது, கொரோனாவுக்கு முந்தைய லெவலை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த சமபள அதிகரிப்பானது பயிற்சியாளர்கள் மற்றும் முதன்மை மூத்த அதிகாரிகளுக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஏற்கனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சம்பள அதிகரிப்பினை செய்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் முடக்கம்
கொரோனாவின் வருகைக்கு பிறகு விமான போக்குவரத்தானது முற்றிலும் முடங்கி போனது. இதனையடுத்து விமான நிறுவனங்கள் பலவும் சம்பள குறைப்பு, சம்பளமில்லா கட்டாய விடுமுறை, பணி நீக்கம் என பற்பல நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால் படிப்படியான விமான போக்குவரத்துகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இயல்பு நிலை ஓரளவுக்கு திரும்பியுள்ளது எனலாம்.
செப்டம்பர் & அக்டோபரில் சம்பளம் ஏற்றம்
விமான போக்குவரத்து வளர்ச்சியானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் குறைத்த சம்பளத்தையும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளன.
ஏற்கனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதன் பயிற்சியாளர்களுக்கு 10% வரையில் சம்பளமும், அதன் கேப்டன்கள் மற்றும் முதன்மை அதிகாரிகளுக்கும் 8% வரையிலும் செப்டம்பர் மாதம் அதிகரிப்பு செய்தது. அக்டோபர் மாதத்தில் அதன் கேப்டன்கள் மற்றும் முதன்மை அதிகாரிகளுக்கும் 22% சம்பள உயர்வினை செய்தது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications