இந்தியா மற்றும் சீனா எல்லை பிரச்சனைக்கு பின் இரு நாட்டு உறவில் பெரும் விரிசலுக்கு பின்பு, கடந்த ஒரு மாத காலத்தில் நிலைமை மாறி வருகிறது. இதன் அடிப்படையில் முன்னணி சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அனைத்தும் தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய துவங்கி தனது வர்த்தகத்தையும், உற்பத்தியையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி, டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஒரு புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தியாவில் விவோ தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்க கிரேட்டர் நொய்டாவில் புதிய 170 ஏக்கர் உற்பத்தி வசதியைத் திறந்துள்ளது. இந்த பேக்டரியில் ஆண்டுக்கு 120 மில்லியன் உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதை தொடர்ந்து இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் டிக்சன் டெக்னாலஜிஸ் உடன் விவோ புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த புதிய நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை அதாவது 51% பங்குகளைக் டிக்சன் டெக்னாலஜிஸ் கொண்டிருக்கும்.
விவோவின் இந்திய துணை நிறுவனமான விவோ இந்தியா, மீதமுள்ள 49% பங்குகளைக் கொண்டிருக்கும். இந்த கூட்டு முயற்சி இந்திய சந்தையில் புதிய உற்பத்தி சக்தியாக மாறக்கூடும், அதேவேளையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்புதிய கூட்டணி டிசைன் துறையில் பணியாற்றுமா அல்லது உற்பத்தியில் இறங்குமா அல்லது விவோ தலைமையில் பிற சீன பிராண்டுகளின் போன்கள் இக்கூட்டணி தயாரிக்குமான என்பது இன்னும் திட்டமிடப்படவில்லை. இதேவேளையில் இக்கூட்டணி டிக்சன் டெக்னாலஜிஸ்-ன் இதர தொழிற்சாலைகளை பயன்படுத்துமா என்பது போன்ற விதிமுறைகளை ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே விவோ- டிக்சன் உட்பட பல இந்திய ஒப்பந்த உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது, விவோ போல் மற்றொரு சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போவும், பல்வேறு இந்திய நிறுவனங்களுடன் இதே போன்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது.
லடாக் எல்லையில் இராணுவ இருப்பைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து முக்கியமான மாற்றம் நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றத்தின் முதல் அறிகுறி தான் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் புதிய செயல்பாடுகள்.
இந்திய சந்தையில் செயல்படும் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிறுவனங்கள் தற்போது பிராண்ட் விளம்பரம், வலுவான டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் தங்கள் உற்பத்தி திறன்களை மேலும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மீண்டும் முதலீடு செய்ய துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications