இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான டிக்சான் டெக்னாலஜிஸ், சீனாவைச் சேர்ந்த டிரான்சியன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தி பிரிவின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டிரான்சியன் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.700 கோடி மதிப்புடையது என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த திடீர் அறிவிப்பு ஏன்..? சமீபத்தில் சீனாவின் எம்ஜி நிறுவனமும் இதேபோன்ற முடிவைத் தான் எடுத்தது. இதற்கும் தற்போது டிக்சான் டெக்னாலஜிஸ் - டிரான்சியன் ஹோல்டிங்ஸ் மத்தியிலான பேச்சுவார்த்தைக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா..?

சீன நிறுவனங்களின் ஆதிக்கம்: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு மத்தியில் டிக்சான் டெக்னாலஜிஸ் - டிரான்சியன் ஹோல்டிங்ஸ் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
டிரான்சியன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்: டிரான்சியன் தற்போது, டெக்னோ, இன்ஃபினிக்ஸ் மற்றும் ஐடெல் போன்ற பிராண்டுகளுக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பியூச்சர் போன்களை தயாரித்து வருகிறது. இதன் மூன்று உற்பத்தி தொழிற்சாலைகள் நொய்டாவில் அமைந்துள்ளன.
டிரான்சியன் ஹோல்டிங்ஸ்-ன் 3 உற்பத்தி தொழிற்சாலைகளும் ஒட்டுமொத்தமாக 25-30 மில்லியன் யூனிட் உற்பத்தி திறன் கொண்டவை. இந்த மூன்று பிராண்டுகளும் இந்தியாவின் மொபைல் ஹேண்ட்செட் சந்தையில் 14% பங்கையும், ஸ்மார்ட்போன் பிரிவில் 8% பங்கையும் கொண்டுள்ளன.
டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனம்: டிக்சான் தற்போது சியோமி, மோட்டோரோலா, சாம்சங் மற்றும் ஜியோ போன்ற பிராண்டுகளுக்காக ஸ்மார்ட்போன்கள் மற்றும் பியூச்சர் போன்களை உற்பத்தி செய்கிறது. நொய்டாவில் உள்ள இதன் நான்கு ஆலைகளில், 30 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 50 மில்லியன் பியூச்சர் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
பேச்சுவார்த்தை: இந்த பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டால், டிக்சான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனது உற்பத்தி திறனை அதிகரித்து தனது வர்த்தகத்தை வலுப்படுத்த முடியும்.
மேலும், சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, இந்திய நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - சீனா மத்தியிலான எல்லைப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சீன நிறுவனங்கள் இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. தற்போது, சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இந்திய சந்தையில் 70% க்கும் அதிகமான சந்தை பங்கீட்டை கொண்டு உள்ளது.
இந்தியா - சீனா மத்தியிலான எல்லை பிரச்சனைக்கு பின்பு டிரான்சியன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் புதிய முதலீடுகளை செய்ய முடியாமல் தவித்து வரும் வேளையில் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதேபோல தான் சீனாவின் எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாமல் தவித்து வந்த நிலையில் தற்போது JSW உடன் கூட்டணி சேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications