இந்தியாவின் முன்னணி ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான டிக்ஸன் டெக்னாலஜிஸ், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல டெலிகாம் உபகரணங்களைத் தயாரிக்கும் நோக்கியா நிறுவனத்துடன் டெலிகாம் உபகரணங்களை டெவலப் செய்யவும் மற்றும் உற்பத்தி செய்யவும் ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.
இதன் மூலம், ஆண்டுதோறும் ரூ.1,500 கோடி மதிப்பிலான உற்பத்தி இலக்கை இக்கூட்டணி எதிர்பார்க்கிறது. இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் தாண்டி டெலிகாம் கருவிகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் நோக்கியா, எரிக்சன் உட்பட பல நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

டிக்ஸன் எலக்ட்ரோ அப்ளைன்சஸ் என்ற டிக்ஸன் டெக்னாலஜிஸின் துணை நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள அதன் தொழிற்சாலையில் நோக்கியா நிறுவனத்தின் டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யவுள்ளதாக செவ்வாயன்று பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
" நோக்கியா - டிக்சான் கூட்டணியில் உருவாக்கப்படும் பிராடெக்ட் இறுதி கட்டத்தில் உள்ளது, இந்த நிலையில் அதன் உற்பத்தி ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும்" என்று டிக்ஸன் டெக்னாலஜிஸின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அதுல் பி.லால் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டணி 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் 1.5-1.8 மில்லியன் யூனிட்கள் உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளதாக அவர் கூறினார். இதன் மூலம் டிக்ஸன் நிறுவனம் ஸ்மார்ட்போன், பியூச்சர் போன் தாண்டி டெலிகாம் உபகரண உற்பத்தியிலும் கில்லியாக மாற உள்ளது.
நோக்கியாவின் டெலிகாம் பிராடெக்ட் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இதன் உற்பத்தி அதிகரித்து நிலைபெற்ற பிறகு, ஃபிக்ஸட் வயர்லெஸ் டிவைசஸ் (Fixed Wireless Devices) பிரிவுக்கு மாதம் சுமார் 100,000-150,000 யூனிட்களும், இன்டூர் வை-ஃபை 5 ரவுட்டர்கள் (indoor Wi-Fi 5 routers) பிரிவுக்கு மாதம் சுமார் 100,000-150,000 யூனிட்கள் என்ற விகிதத்தில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம் என அதுல் லால் தெரிவித்தார்.
டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் ரூ.4,115 கோடி மதிப்பிலான டெலிகாம் மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளுக்கான PLI திட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது.
டிக்ஸன் டெக்னாலஜிஸ் பங்குகள் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 0.94 சதவீதம் சரிந்து 8,335.00 ரூபாய்க்கு முடிவடைந்தது. இதன் சந்தை மதிப்பு 49,860 கோடி ரூபாயாக உள்ளது. டிக்ஸன் டெக்னாலஜிஸ் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 9.16 சதவீதமும், 6 மாதத்தில் 55.58 சதவீதமும், ஒரு வருடத்தில் 187.11 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications