சென்னை: டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படக்கூடிய டிக்சன் டெக்னாலஜிஸ் (Dixon Technologies) நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் நிறுவியுள்ள தங்களுடைய ஆலையை வரும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்திலேயே திறக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான அப்துல் பி லால் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கப்படும் தங்கள் நிறுவனத்தின் 24 ஆவது ஆலையாக இது இருக்கும் என கூறியுள்ளார். டிக்சன் டெக்னாலஜிஸ் என்பது டெல்லி அருகே நொய்டாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய பன்னாட்டு மின்னணு உற்பத்தி சேவை நிறுவனம் ஆகும்.

செல்போன்கள் ,லேப்டாப்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் , செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் என பல்வேறு மின்னணு சாதனங்களை பல்வேறு பிராண்டுகளுக்காக தயாரித்து வழங்கி செய்து வருகிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தன்னுடைய உற்பத்தி ஆலைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் 24ஆவது ஆலை தமிழ்நாட்டில் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நிறுவப்பட்டு வருகிறது.
இந்த ஆலை கட்டுமான பணிகள் முடிவடைந்து ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்திற்குள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்சன் நிறுவனத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வரக்கூடிய லால், இந்த ஆண்டு தங்கள் நிறுவனத்தின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் கடந்த ஆண்டு 18,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாகவும் நடப்பாண்டில் அது இரண்டு மடங்காக உயரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஆலை கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து விட்டன என தெரிவித்துள்ள அவர் முதல் கட்டத்தில் தங்கள் நிறுவனம் 250 லிருந்து 300 கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்குள் இது 1000 கோடியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். சென்னையில் நிறுவப்பட்டுள்ள இந்த ஆலையில் தங்கள் நிறுவனம் அதிக அளவிலான முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆலையில் 3 - 4 மில்லியன் வரையிலான லேப்டாப்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயத்திருப்பதாக கூறியுள்ளார். இது தவிர சர்வர்கள், எஸ்.எஸ்.டி ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார் .
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவில் ஸியோமி ,சாம்சங், நோக்கியா, பானசோனிக், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் நுகர்வோர் மின்னணு சாதன பொருட்களை உற்பத்தி செய்து வழங்குகிறது. பஜாஜ், விப்ரோ, ஓரியண்ட், கிராம்ப்டன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளக்குகளையும் ,கோத்ரேஜ், பானசோனிக், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களையும் தயாரித்து வழங்குகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications