தமிழ்நாடு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. அதற்கான களம் இப்போது முதலே பரபரப்பாகிவிட்டது . ஒருபுறம் ஆளும் திமுக கூட்டணி ,மறுபுறம் பாஜக அதிமுக கூட்டணி , மற்றொருபுறம் சீமான் மற்றும் விஜய் என அரசியல் களம் நாள்தோறும் புதிய பரபரப்புகளை எட்டி வருகிறது.
திராவிட மாடல் ஆட்சி என கூறி 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகத்தை அமைத்தார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்திருக்கிறது . தமிழ்நாடு அரசு சென்னையோடு முதலீடுகள் நின்று விடக்கூடாது என்பதை கவனமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் , டைடல் பூங்காக்கள் ஆகியவற்றை கட்டமைத்து வருகிறது . இது தவிர மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டாளர் மாநாடுகளையும் நடத்தி வருகிறது.

தூத்துக்குடி, ஓசூரில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து இந்த மாத இறுதியில் கோயம்புத்தூரிலும் முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு முதலீடுகள் ஈர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது ஒன்றாகவும் உண்மை நிலவரம் வேறாகவும் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையில் முதலீடுகள் வரவில்லை வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இந்த குற்றசாட்டுகளை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மறுத்துள்ளார். ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசு புதிய முதலீடுகளை பெறும்போது எல்லாமே யாரேனும் ஒருவர் அது குறித்து அவதூறு கூறுகின்றனர் என்கிறார்.
ஆங்கில இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள அவர் தமிழ்நாட்டின் தொழில்துறை முன்னேற்றத்தின் மீது தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் கடந்த நான்காண்டுகளில் அரசு நிரூபிக்க கூடிய வகையில் தொழில் துறை முன்னேற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என கூறியிருக்கிறார் .2021 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்துட்டு இருக்கிறது என கூறுகிறார் . இதன் மூலம் 11.4 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்றும் இந்த முதலீடுகள் மூலம் 34 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 809 ஒப்பந்தங்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது என கூறுகிறார் .இந்த முதலீட்டு ஒப்பந்தங்கள் அனைத்தும் தற்போது வணிக உற்பத்தி, சோதனை ஓட்டங்கள் , பகுதி அளவு செயல்பாடு தொடக்கம், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் இருப்பதாக அவர் விளக்கம் தந்திருக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டால் முதல் நாளிலேயே அனைத்து பணத்தையும் முதலீடு செய்வார்கள் என கருதுவது குழந்தைத்தனமானது என கூறியுள்ளார்.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பது முதலீட்டு உறுதிமொழிகள் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம் எனவே அறிவிக்கப்பட்ட அனைத்து முதலீட்டு உறுதிமொழிகளும் உடனடியாக செய்யப்படும் முதலீடுகள் என கருதுவது அபத்தமானது என கூறியிருக்கிறார் .ஒரு மாநிலத்தில் ஒரு முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தம் பெறப்பட்டு அந்த முதலீடு எப்படி நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது என்பது குறித்த புரிதல் இல்லாதவர்கள் தான் இது போன்ற தவறான தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைப்பார்கள் என கூறியிருக்கிறார் .
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பது அடுத்த பல ஆண்டுகளுக்கான முதலீட்டு வாக்குறுதி என சுட்டிக்காட்டி இருக்கிறார் . தமிழ்நாடு அரசு கூறுவது ஒன்றாகவும் உண்மையில் வரக்கூடிய முதலீடுகள் வேறாகவும் இருக்கின்றன என அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருக்கிறார் . தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி இல்லை என்பார்கள் ஆனால் தொழில்துறை பூங்காக்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்க்கிறார்கள் , விமான நிலையம் போன்ற முக்கியமான உள் கட்டமைப்பு திட்டங்கள் கொண்டு வருவதை தடுப்பார்கள் என கூறியிருக்கிறார்.
மத்திய அரசே தமிழ்நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றும் 11.19 சதவீத இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது என கூறி இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். தமிழ்நாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தரவுகளின் படி 2021-22 ஆம் ஆண்டில் 54 லட்சமாக இருந்த பதிவு செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2025- 26 ஆம் ஆண்டில் 84 லட்சமாக உயர்ந்து இருக்கிறது . அதாவது இந்த ஐந்து ஆண்டுகளில் 30 லட்சம் வேலை வாய்ப்புகள் formal துறையிலேயே உருவாகி இருக்கின்றன என அவர் குறிப்பிடுகிறார்.


Click it and Unblock the Notifications