பட்ஜெட் 2024 அறிவிப்புகள் உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து, இத்துறையில் பிரபலமான எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராதிகா குப்தா, சமூக வலைத்தளமான X இல் விளக்கினார். மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் வரி விதிப்பில் உள்ள மாற்றங்களை விளக்கும் வீடியோ-வையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
பட்ஜெட்டுக்கு முன், மியூச்சுவல் பண்டுகள் நீண்ட கால மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரி, மார்ஜினல் வரி விகிதங்கள் மற்றும் இன்டெக்ஸேஷன் பலன்கள் உட்பட பல்வேறு வரி வகைகளுக்கு உட்பட்டது, ஆனால் பட்ஜெட்டுக்கு பின்பு இது மாறியுள்ளது என்பதை அவர் விளக்கினார்.

பட்ஜெட்டுக்கு பின்பு புதிய வரி விதிப்பு முறையில், மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரி விதிப்பில் இப்போது மூன்று பிரதான பிரிவுகள் உள்ளன.
முதல் பிரிவில், 65% க்கும் அதிகமான பங்கு முதலீடுகளைக் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. "இவை கேப்பிட்டல் அசர்ட்ஸ் என கருதப்பட்டு அதற்கான வரி விதிக்கப்படுகின்றன, அந்த வகையில் குறுகிய கால ஆதாய வரியாக 20%, நீண்ட கால ஆதாய வரியாக 12.5%, நீண்ட காலம் என்பது ஒரு வருடத்திற்கு மேல் வைத்திருப்பதைக் குறிக்கும்" என்று எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் நிர்வாக இயக்குநரும், சிஇஓ-வுமான ராதிகா குப்தா தெரிவித்தார்.
இரண்டாவது பிரிவில், 65% க்கும் அதிகமாகக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள மியூச்சுவல் பண்ட்கள் உள்ளன. இவை குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீடுகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் marginal tax rate, அதாவது உங்கள் வருமான வரி பலகையின் கீழ் விதிக்கப்படும் வரியில் கணக்கிடப்படும். இந்தப் பிரிவு கடந்த ஆண்டிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதாக குப்தா சுட்டிக்காட்டினார்.
மூன்றாவது பிரிவில், முதல் இரண்டு பிரிவுகளிலும் பொருந்தாத நிதிகள், எடுத்துக்காட்டாக, தங்கக் குறியீட்டு நிதிகள் (gold index funds), கோல்டு எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்டுகள் (gold ETFs), பங்குகளில் முதலீடு செய்யும் ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் (funds of funds investing in equity), சர்வதேச நிதிகள் (international funds), மற்றும் நிலையான அல்லது ஹைப்ரிட் நிதிகள் (conservative or hybrid funds) ஆகியவை அடங்கும்.
"இவை குறுகிய காலத்திற்கு மார்ஜினல் வரி விகிதத்திலும், நீண்ட காலத்திற்கு (இரண்டு வருடங்களுக்கு மேல் வைத்திருப்பது) 12.5% மூலதன ஆதாய வரி (capital gains tax) விதிக்கப்படுகின்றன" என்று ராதிகா குப்தா தெரிவித்தார். இவரின் விளக்கத்திற்கு முக்கியமான காரணம் இன்டெக்ஸேஷன் பலன்கள் நீக்கப்பட்டு உள்ளதை விளக்குவதே ஆகும். இன்டெக்ஸேஷன் பற்றிய விளக்கத்தைச் செய்தியின் இறுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய மாற்றங்கள் மூலம் ஏற்படும் தாக்கத்தைப் பற்றித் தொடர்ந்து பேசிய ராதிகா குப்தா, நீங்கள் மூன்றாவது பிரிவில் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால், தற்போது மார்ஜினல் வரி விகிதத்திற்குப் பதிலாக, இப்போது இரண்டு வருட நீண்ட காலத்திற்கு 12.5% மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது," என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, பட்ஜெட் 2024ல் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரி விதிப்புகள் எளிமையாக்கப்பட்டு உள்ளது, இதேபோல் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த வரி மாற்றம் மூலம் நன்மை அதிகம் என கூறுகிறார் ராதிகா குப்தா. காரணம் நீண்ட கால மூலதன ஆதாய வரி என்பது 12.5 சதவீதம் தான், முன்பு இது வருமான வரி பலகையின் அடிப்படையில் இருந்தது.
இந்த மாற்றும் பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டை செய்ய முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்துவது மட்டும் அல்லாமல் வரியைச் சேமிக்க முடியும். மேலும் 65% க்கும் அதிகமான பங்கு முதலீடுகளைக் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நீண்ட கால முதலீடு என்றால் 12 மாதத்திற்கு அதிகமான காலம்.
சரி விஷயத்திற்கு வருவோம், இன்டெக்ஸேஷன் என்றால், மியூச்சவல் பண்டில் ஒருவர் செய்த முதலீட்டை விற்பனை செய்யும் போது கிடைக்கும் லாபத்திற்கு கேப்பிடல் கெயின்ஸ் டாக்ஸ் கணக்கிடும் முறையில் ஒரு பகுதி தான் இன்டெக்ஸேஷன். கேப்பிடல் கெயின்ஸ் அளவீட்டைக் கணக்கிடும் போது ஒருவர் வாங்கிய மியூச்சவல் பண்டின் விலையை, இன்றைய பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்திக் கணக்கிட்டு அதன் அடிப்படையில், லாப அளவுகளைக் கணக்கிட்டு லாபத்தில் மார்ஜினல் வரி செலுத்துவார்கள். இந்த முறை இனி கிடையாது என்பது தான் மத்திய அரசு இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
வாங்கியதற்கும் - விற்பனை செய்ததற்கும் இடையில் உள்ள தொகையை மொத்தமாக லாபமாகக் கருதி 12.5 சதவீதம் என்ற நிலையான வரி வசூலிக்கப்பட உள்ளது. இது தான் இந்த பட்ஜெட்டில் நடந்த முக்கியமான மாற்றம் அதேபோல் நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீட்டுக்கான கால அவகாசத்தையும் மாற்றியுள்ளது.
பட்ஜெட் அறிக்கையில் மூலதன ஆதாய வரி விதிப்பை எளிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, சொத்துகளை எவ்வளவு காலம் வைத்திருந்தோம் என்பதைப் பொறுத்து வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.
பட்டியலிடப்பட்ட பத்திரங்களுக்கு (பங்குகள் போன்றவை) - 12 மாதங்கள்
பட்டியலிடப்படாத சொத்துகள் (பத்திரங்கள், கடன் பத்திரங்கள், தங்கம்) - 24 மாதங்கள்
பிற பட்டியலிடப்படாத சொத்துகள்(பட்டியலிடப்படாத பங்குகள், ரியல் எஸ்டேட் போன்றவை) - 24 மாதங்கள் (பழைய அளவீடுகள்)


Click it and Unblock the Notifications