சென்னை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ் மாடல் போன்கள் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் விற்பனைக்கு வந்தன. இதில் 128 ஜிபி ஐபோன் 16இன் விலை இந்தியாவில் 79,900 ரூபாய், 256 ஜிபி கொண்ட ஐபோன் 16இன் விலை 89, 900 ரூபாய், 512 ஜிபி கொண்ட ஐபோன் 16இன் விலை 1,09,900 ரூபாய் ஆகும்.
சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் செல்போன் விற்பனையில் ஈடுபட்டாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை வாங்குவதற்கு என்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை நாம் காணலாம். விலை அதிகமாக இருந்தாலும் ஐபோன் வைத்திருப்பதே ஒரு கெத்து என மனநிலையும் இதற்கு காரணம்.

ஐபோன் 16 விலை குறித்தும் எந்தெந்த நாடுகளில் இருக்கும் மக்கள் எவ்வளவு நாட்கள் வேலை செய்தால் இந்த போனை வாங்க முடியும் என்பது குறித்தும் ஒரு புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
picodi.com என்ற தளம் ஒரு நாட்டில் ஐபோன் 16 இன் விலை எவ்வளவு அந்த நாட்டில் இருக்கும் மக்களின் சராசரி ஊதியம் எவ்வளவு என்ற இரண்டு இரண்டையும் அளவீடாக கொண்டு ஒரு நாட்டில் ஒருவர் எத்தனை நாட்கள் வேலை செய்தால் அவரால் ஐபோன் 16ஐ வாங்க முடியும் என்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி சுவிட்சர்லாந்து நாட்டில் தான் குறைந்த நாட்களிலேயே வேலை செய்து ஐபோன் 16 வாங்க முடியும். அதாவது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு நபர் வெறும் 4 நாட்கள் வேலை செய்தாலே போதும் ஐபோன் 16 வாங்குவதற்கான பணத்தை சம்பாதித்து விட முடியும்.
அடுத்ததாக அமெரிக்காவை சேர்ந்தவர்கள் 5.1 நாட்கள் வேலை செய்தாலே ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வாங்குவதற்கான ஊதியம் கிடைத்துவிடும். அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் 5.7 நாட்கள் வேலை செய்தாலே ஐபோன் 16 மாடல்களை வாங்குவதற்கான ஊதியத்தை பெற்று விடுவார்கள்.
இந்த பட்டியலில் இந்தியா 46ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த ஒரு நபர் மொத்தம் 47.6 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே புதிய ஐபோன் 16 மாடல் வாங்குவதற்கான பணத்தை சம்பாதிக்க முடியுமாம். உலகிலேயே அதிகபட்சமாக துருக்கி நாட்டினர் தான் மிக நீண்ட நாட்கள் வேலை செய்ய வேண்டிய சூழலில் இருக்கின்றனர்.
துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 72.9 நாட்கள் வேலை செய்தால் தான் இதற்கான தொகையை சம்பாதிக்க முடியும். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மக்கள் 68.8 நாட்கள் வேலை செய்ய வேண்டும், பிரேசில் நாட்டை சேர்ந்தவர்கள் 68.6 நாட்கள் வேலை செய்ய வேண்டும், சீனாவை சேர்ந்தவர்கள் 24.7 நாட்கள் வேலை செய்தால் மட்டுமே ஐபோன் 16 வாங்குவதற்கான பணத்தை சம்பாதிக்க முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications