ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் பிறக்கு கொடுப்பது அல்லது நன்கொடை அளிப்பது என்பது மிகவும் அரிது. ஆனால் கடந்த 20 வருடத்தில் பெரும் தொழிலதிபர்கள் தாங்கள் கோடி கோடியாய் சம்பாதித்து வைத்திருக்கும் தொகையில் சிறிதளவு தொகையாவது தன் நாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்த நன்கொடை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
இதனால் பெரும் தொழிலதிபர்கள் மத்தியில் தற்போது யார் அதிகமாக நன்கொடை அளிக்கிறார்கள் என்பதில் பெரும் போட்டி உருவாகியுள்ளது. இந்தியாவில் பெரும் நன்கொடையாளர் (தனிநபர்) யார் என்றால் கட்டாயம் உங்களுக்கு சில பெயர்கள் தோன்றும். ஆனால் இளம் நன்கொடையாளர் என்றால் உங்களுக்கு யார் நினைவுக்கு வருகிறார்..?

38 வயதான ஜெரோதா நிறுவனர் நிகில் காமத் இந்த வருடமும் இந்தியாவின் இளம் நன்கொடையாளராக (philanthropist) உள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹூரன் இந்தியா பட்டியல் 2024 இல், காமத் ரெயின்மேட்டர் அறக்கட்டளைக்கு சுமார் ரூ.120 கோடி நன்கொடை அளித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் இளம் நன்கொடையாளர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ப்ரோகரேஜ் தளமான ஜெரோதா-வை நிறுவியதன் மூலம் நிகில் காமத் பெரும் சொத்துக்களை சேர்த்தது மட்டும் அல்லாமல் தற்போது பல ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும் சொத்துக்களை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் ஜெரோதா நிறுவனம் மியூச்சவல் பண்ட் துறையில் இறங்கி பெரும் முதலீடுகளை ஈர்த்து வெற்றி கண்டு வருகிறது.
காமத் காலநிலை மாற்றம், எனர்ஜி, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல காரணங்களுக்காக நன்கொடை கொடுத்து வருகிறார். குறிப்பாக, பில் கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரால் நிறுவப்பட்ட தி கிவிங் பிளெட்ஜ் என்ற தொண்டு முயற்சியின் இளம் இந்திய உறுப்பினராகவும் உள்ளார்.
தி கிவிங் பிளெட்ஜ் என்ற அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பெரும்பாலும் தங்கள் செல்வத்தில் பெரும் பகுதியை தொண்டு நோக்கங்களுக்காக நன்கொடை அளிக்க ஒப்புக்கொண்டவர்கள். 38 வயதான நிகில் காமத் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளதாக நிலையில், சில வாரங்களுக்கு முன்பு தான், தனது முதல் சொந்த வீட்டை வாங்கியிருப்பதாக அறிவித்தார்.
இந்தியாவில் இளம் நன்கொடையாளர் பட்டியலில் வில்லூ பூனாவல்லா அறக்கட்டளையின் ஆதார் பூனவல்லா (43) மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸின் விவேக் வக்கீல் (35) ஆகியோர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications