ஜோலா பைகள் (Jhola bags) இதனை பயன்படுத்தாத இந்தியர்களே இருக்க முடியாது என கூறலாம். நல்ல வலுவான பைகள் என்பதால் அதிக எடை கொண்ட பொருட்களை கூட கொண்டு செல்ல முடியும். மளிகை கடைகளில் பெரும்பாலும் இந்த பைகளை காணலாம். சில கடைகளில் பொருட்களை வாங்கினால் இலவசமாகவே இந்த பைகளை தருவார்கள்.
இப்படி நம் வீடுகளில் கேட்பாரற்று கிடக்கும் இந்த ஜோலா பைகளுக்கு வெளிநாடுகளில் எவ்வளவு டிமாண்ட் தெரியுமா. பொதுவாக சோப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், மசாலா தயாரிக்கும் நிறுவனங்கள் தான் இந்த ஜோலா பைகளை வழங்குவார்கள். இந்த பைகளில் அந்த நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்டிருக்கும். பெரும்பாலான கிராமங்கள் இந்த பைகளை நாம் பார்க்கலாம். இருந்தாலும் தற்போதுள்ள நவநாகரீக இந்தியர்கள் இந்த பைகளை பயன்படுத்துவதை கௌரவமாக பார்ப்பதில்லை.

ஆனால் நாம் அப்படி நினைக்கும் இந்த பைகளை வெளிநாடுகளில் பல ஆயிரம் கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் இதனை வாங்காத நபர்கள் வெளிநாடுகளில் சொந்த மண்ணை நினைவு படுத்தும் பொருளாக வாங்கி பயன்படுத்துகிறார்களாம். துணியால் தைக்கப்படும் இந்த வகை பைகள் அதிக எடையை தாங்கும் திறன் கொண்டவை. சுற்றுசூழலுக்கும் இதனால் கேடு கிடையாது. எனவே வெளிநாட்டவர்களும் இதனை பெருமளவில் வாங்க ஆர்வம் காட்டுவதாக தி பெட்டர் இந்தியா தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த பைகளை பல ஆயிரங்களுக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்கிறது. ஆடம்பர பொருட்களை விற்பனை செய்வதில் பெயர் பெற்ற அமெரிக்க நிறுவனமான , நோர்ட்ஸ்ட்ரோம் (Nordstorm) தங்கள் இணையதளம் வாயிலாக அமெரிக்க சந்தையில் இதனை விற்கிறது. இதற்கு Indian souvenir bag அதாவது இந்திய நினைவுப் பை என பெயரிட்டு விற்கப்பட்டு வருகிறது.

பியூப்கோ (Puebco) என்ற ஜப்பானை சேர்ந்த நிறுவனம் தான் இந்த ஜோலா பைகளை தயாரிக்கிறது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் இந்த ஒரு ஜோலா பையின் விலை 48 அமெரிக்க டாலர்கள், அதாவது 4,100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். பியூப்கோ நிறுவனம் இந்திய பையை போலவே இருக்க வேண்டும் என்பதற்காக இந்தி எழுத்துக்களால் புகழ்பெற்ற இந்திய உள்ளூர் தயாரிப்புகளின் பெயர்களை பைகளில் அச்சிட்டுள்ளது.
இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்திய வீடுகளின் அங்கமாக இருக்கும் ஒரு பொருள் வெளிநாடுகளில் இந்திய கலாசாரத்தின் சான்றாக மாறி விற்பனை செய்யப்படுகிறது. சமூகவலைதளங்களில் பலரும் இது பற்றி தான் பேசி வருகின்றனர். எங்க வீட்டில் சும்மாவே 10 பை கிடக்கிறது, இதையா 4000 ரூபாய் கொடுத்து வாங்குகின்றனர் என பலரும் ஆச்சர்யப்படுகின்றனர்.
நாங்கள் இலவசமாகவே இந்த பைகளை வாங்கி வைத்திருக்கிறோம், 4000 ரூபாய்க்கு எத்தனை பைகளை இந்தியாவில் வாங்கலாம் தெரியுமா என நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications