சிக்மங்களூரு: முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தை யாருக்கு தான் பிடிக்காது. பொதுவாக நாம் பழத்தை சாப்பிட்டு விட்டு விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். இப்படி தூக்கி எறியப்படும் பலாப்பழ விதைகளுக்கு இப்போது மவுசு தெரியுமா?
தற்போது பலாப்பழத்தை அடிப்படையாக கொண்டு பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை. குறிப்பாக ஆனால் தற்போது தாவர அடிப்படையிலான இறைச்சி பொருட்களை தயார் செய்வதற்கு பலாப்பழ விதை ஒரு முக்கிய பகுதியாக செயல்படுகிறது.

இந்த தாவர அடிப்படையிலான இறைச்சிகள் அண்மை காலமாக சைவ உணவு பிரியர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றன. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் இதனை தான் லாபகரமான தொழிலாக மாற்றி இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தை சேர்ந்த நரேந்திரா என்பவர் பலாப்பழ விதைகளை விற்பனை செய்து அதனை ஒரு லாபமுள்ள தொழிலாக மாற்றியுள்ளார். இவரிடம் இருந்து ஈஷா அறக்கட்டளை போன்ற பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களும் பலாப்பழ விதைகளை வாங்குவதாக தெரிவிக்கிறார்.
பலாப்பழ சீசன் தொடங்கிய மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையிலான காலத்தில் மட்டும் தான் ஈஷா அறக்கட்டளைக்கு மூன்று முதல் நான்கு டன்கள் பலாப்பழ விதைகளை அனுப்பி வைத்திருப்பதாக கூறுகிறார்.
நரேந்திராவை பொறுத்தவரை சொந்தமாக என்.ஜி. ஃப்ரூட்ஸ் (N.G. Fruits) என்ற ஒரு நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார். இங்கிருந்து இவர் பலாப்பழ விதைகளை சேகரித்து பல்வேறு நிறுவனங்களுக்கும் அனுப்பி வருகிறார். சில நேரங்களில் வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுமாம். இந்த பலாப்பழ விதைகளை பயன்படுத்தி பிஸ்கட்டுகள், காபி பவுடர் உள்ளிட்டவற்றை தயார் செய்கிறார்கள்.
இந்த பலாப்பழ விதைகள் காய வைக்கப்பட்டு உடைக்கப்பட்டு பவுடராக மாற்றப்படுகிறது. பல உணவு பொருட்களில் மைதா மாவிற்கு பதிலாக பலாப்பழ விதையின் மாவு பயன்படுத்தப்படுகிறது. பலாப்பழ சீசன் காலங்களில் மட்டும் இவர் இந்த விதைகளை விற்பனை செய்து 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அது மட்டும் இன்றி பல்வேறு வனத்துறை அலுவலகங்களும் இவரிடம் இருந்து பலாப்பழ விதைகளை வாங்கி காடுகளில் விதைக்கிறார்கள்.
ஒரு கிலோ பலாப்பழம் விதை 30 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. நிறுவனங்களுக்கு ஏற்ப விலை மாறுபடும் என சொல்லப்படுகிறது. இந்த விதைகளில் கிடைக்கும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்திருப்பது காரணமாக தற்போது இதற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது என நரேந்திரா கூறுகிறார். ஒருவருக்கு தேவையில்லாததாக தோன்றும் பொருள் மற்றொருவருக்கு பொக்கிஷம் என கூறுவார்கள். அது இவர் விஷயத்தில் சரியாக இருக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications